கோலார் அருகே வெறிநாய்கள் கடித்து குதறி 15 ஆடுகள் செத்தன 3 நாய்களையும் கிராம மக்கள் அடித்துக் கொன்றனர்


கோலார் அருகே வெறிநாய்கள் கடித்து குதறி 15 ஆடுகள் செத்தன 3 நாய்களையும் கிராம மக்கள் அடித்துக் கொன்றனர்
x
தினத்தந்தி 22 Dec 2017 9:30 PM GMT (Updated: 22 Dec 2017 8:09 PM GMT)

கோலார் அருகே வெறிநாய்கள் கடித்து குதறியதில் 15 ஆடுகள் பரிதாபமாக செத்தன. ஆத்திரமடைந்த கிராம மக்கள் 3 நாய்களையும் உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்றனர்.

கோலார் தங்கவயல்,

கோலார் அருகே வெறிநாய்கள் கடித்து குதறியதில் 15 ஆடுகள் பரிதாபமாக செத்தன. ஆத்திரமடைந்த கிராம மக்கள் 3 நாய்களையும் உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்றனர்.

15 ஆடுகள் செத்தன

கோலார் தாலுகா கோகிலஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனியம்மா. இவருடைய தம்பி நாகராஜ். இவர்கள் தங்களது வீட்டின் அருகே கொட்டகை அமைத்து 50–க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார்கள். வறுமையில் வாடி வந்த இவர்கள், விவசாய நிலங்களில் ஆட்டுப்பட்டி அமைத்து பிழைப்பு நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டது. இதனால் முனியம்மாவும், நாகராஜிம் வெளியே வந்து பார்த்தனர்.

அப்போது, ஆட்டு கொட்டகைக்குள் 3 வெறிநாய்கள் புகுந்து ஆடுகளை கடித்து குதறினர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், 3 வெறிநாய்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். வெறிநாய்கள் கடித்து குதறியதில் 15 ஆடுகள் பரிதாபமாக செத்தன. மேலும் 3 ஆடுகள் காயமடைந்தன. செத்துப்போன ஆடுகளை பார்த்து முனியம்மாவும், நாகராஜிம் கதறி அழுதனர்.

3 வெறிநாய்களை அடித்துக் கொன்ற கிராம மக்கள்

இந்த சம்பவம் நேற்று காட்டு தீ போல அந்தப்பகுதியில் பரவியது. இந்தப்பகுதியில் தொடர்ந்து வெறிநாய்கள் அட்டகாசம் செய்து வருவதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், அந்த நாய்களை அடித்துக் கொல்ல திட்டமிட்டனர். அதன்படி, நேற்று கோகிலஹள்ளி கிராமத்தை சேர்ந்த மக்கள் 50–க்கும் மேற்பட்டோர் கைகளில் உருட்டுக்கட்டைகளுடன் நாய்களை தேடினர். அப்போது அந்த நாய்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு பாழடைந்த மண்டபத்தில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கிராம மக்கள் அந்த மண்டபத்தை சுற்றி வளைத்து, 3 வெறிநாய்களையும் உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்றனர். அதன்பின்னர், 15 ஆடுகளை இழந்த முனியம்மா, நாகராஜிக்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும் என்று அந்தப்பகுதி மக்கள் வருவாய் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story