வாக்குகள் எண்ணிக்கை நாளை நடக்கிறது வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு


வாக்குகள் எண்ணிக்கை நாளை நடக்கிறது வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு
x
தினத்தந்தி 23 Dec 2017 5:45 AM IST (Updated: 23 Dec 2017 1:57 AM IST)
t-max-icont-min-icon

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. இதையொட்டி வாக்கு எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் நேற்றுமுன்தினம் நடந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும், வேட்பாளர்களின் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன. ‘சீல்’ வைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சென்னை காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியின் பொன்விழா கட்டிடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறையை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அந்த அறையின் உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் பதிவாகும் காட்சிகளை அறையின் வெளியே அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

நாளை வாக்கு எண்ணிக்கை

மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறையையும், வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளையும் மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீன் நாயர், பொது பார்வையாளர்கள் கம்லேஷ்குமார் பந்த், அல்கா ஸ்ரீவாஸ்தவா உள்பட உயர் அதிகாரிகள் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

வாக்கு எண்ணிக்கை நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். சற்று நேரத்திலேயே அதிக வாக்குகள் பெற்று முன்னணியில் யார் இருக்கிறார்கள்? என்ற நிலவரம் தெரியவரும்.

மதியத்துக்குள் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து, முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

19 சுற்றுகள்

வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்த பின்னர் மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஆர்.கே.நகரில் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. ஒரு சுற்றில், 14 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளை எண்ண முடியும். 18 சுற்றுகள் முழுமையாகவும், ஒரு சுற்று பகுதியாகவும் என மொத்தம் 19 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று எதிர்பார்க்கிறோம்.

தேர்தலை எப்படி அமைதியாக நடத்தினோமோ, அதுபோல வாக்கு எண்ணிக்கையும் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறும். தேர்தலை நன்றாக நடத்த ஒத்துழைப்பு தந்த சென்னை போலீஸ் கமிஷனர், போலீசார், தேர்தல் பார்வையாளர்கள், அரசியல் கட்சியினருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

3 அடுக்கு பாதுகாப்பு

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நிருபர்களிடம் கூறுகையில், “வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிகாரிகள், போலீசார் என 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுபோக துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மிகவும் அமைதியாகவும், சிறப்பாகவும் வாக்கு எண்ணிக்கை நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது” என்றார்.

பரிசீலனை கூட்டம்

முன்னதாக வாக்குப்பதிவு குறித்த பரிசீலனை கூட்டம் ராணி மேரி கல்லூரியில் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீன் நாயர், பொது பார்வையாளர்கள் கம்லேஷ்குமார் பந்த், அல்கா ஸ்ரீவாஸ்தவா, மாவட்ட கூடுதல் தேர்தல் நடத்தும் அதிகாரி எஸ்.திவ்யதர்ஷினி, அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் பங்கேற்றனர். 

Next Story