உடுமலை அருகே, முன்விரோதம் காரணமாக அரசு பஸ் டிரைவரை வெட்டிக்கொன்ற வழக்கில் பால் வியாபாரிக்கு ஆயுள் தண்டனை
உடுமலை அருகே முன்விரோதம் காரணமாக அரசு பஸ் டிரைவரை வெட்டிக்கொன்ற வழக்கில் பால்வியாபாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து தாராபுரம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
தாராபுரம்,
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த தளி பஜனைகோவில் தெருவை சேர்ந்தவர் மதனகோபால். இவரது மகன் காளிதாஸ் (வயது 33). இவர் அரசு போக்குவரத்து கழகம் கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் டிரைவராக வேலை செய்து வந்தார். கடந்த 2014-ம் ஆண்டு காளிதாசுக்கும், திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா பாப்பம்பட்டி அருகே உள்ள குப்பம்பாளையத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவரின் மகள் தனலட்சுமிக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
அப்போது தளியை சேர்ந்த பால் வியாபாரியான ராமசாமி (51) என்பவர் காளிதாசுக்கு நடக்க இருந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்திவிட்டு, தனலட்சுமியை தனது உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்டார்.
அதிர்ச்சி
அதையடுத்து தனலட்சுமியின் பெற்றோரை, ராமசாமி தொடர்பு கொண்டு, காளிதாசை பற்றியும் அவரது குடும்பத்தை பற்றியும் தவறான தகவல்களை தெரிவித்துள்ளார். ராமசாமி தெரிவித்த தகவல்களை உண்மை என்று நம்பிய, தனலட்சுமியின் பெற்றோர், தனலட்சுமிக்கும்-காளிதாசுக்கும் நடக்க இருந்த திருமணத்தை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.
காளிதாசின் திருமணம் தடைபடுவது தெரிந்ததும் காளிதாசின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். உடனே காளிதாசின் பெற்றோர் தனலட்சுமி குடும்பத்தினரிடம், திருமணம் தடைபடுவதற்கான காரணம் என்ன என்று கேட்டுள்ளனர். அதற்கு தனலட்சுமியின் பெற்றோர்கள், மாப்பிள்ளை காளிதாசை பற்றி தவறான தகவல்களை கொடுத்தது ராமசாமி தான் என்பதையும் வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.
திருமணம்
அதன் பிறகு இருவீட்டாரும் தங்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினைகளை பேசி தீர்த்துக் கொண்டு, கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி காளிதாசுக்கும் தனலட்சுமிக்கும் திருமணத்தை முடித்து வைத்தனர். இதனால் ராமசாமிக்கும், காளிதாசுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. இதனால் இருவரும் அடிக்கடி வாய்த்தகராறில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் ஒரு நாள் ராமசாமிக்கும் காளிதாசுக்கும் வழக்கம் போல் வாய்த்தகராறு ஏற்பட்டு பிறகு அடிதடி தகராறாக மாறி, இருவரும் சண்டை போட்டுக்கொண்டனர். இந்த சண்டையில், ராமசாமியின் காதை காளிதாஸ் கடித்து துப்பி விட்டார். இதனால் ராமசாமியின் காது பிய்ந்து போனது.
கொலை
இதை ராமசாமி அவமானமாக கருதியதோடு, காளிதாஸ் மீது மிகுந்த ஆத்திரம் கொண்டு அவரை கொலை செய்ய திட்டமிட்டார். இந்த நிலையில் கடந்த 21.8.2015 அன்று இரவு காளிதாஸ் தனது வீட்டிற்கு மளிகை சாமான்கள் வாங்குவதற்காக தளியில் உள்ள மளிகைக் கடைக்கு தனியாக சென்றுள்ளார்.
அங்கு மளிகை பொருட்களை வாங்கி விட்டு வீட்டிற்கு சென்றபோது அவரை பின் தொடர்ந்து வந்த ராமசாமி தனது பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் காளிதாசை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிஓடி விட்டார். இதில் பலத்த காயம் அடைந்த காளிதாஸ் இறந்தார்.
ஆயுள் தண்டனை
இந்த கொலை சம்பவம் குறித்து தளி போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்ட ராமசாமியை கைது செய்தனர்.
இதையடுத்து ராமசாமி மீதான கொலை வழக்கு தாராபுரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கருணாநிதி நேற்று தீர்ப்பு கூறினார்.
அந்த தீர்ப்பில் காளிதாசை கொலை செய்த குற்றத்திற்காக ராமசாமிக்கு ஆயுள் தண்டனையும் ரூ.1,000 அபராதமும், காளிதாசின் மனைவி தனலட்சுமிக்கு இழப்பீடாக ரூ. 1 லட்சம் வழங்க வேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பு கூறியுள்ளார். இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீல் ஆனந்தன் ஆஜராகி வாதாடியிருந்தார்.
Related Tags :
Next Story