திம்பம் மலைப்பாதையில் 25 அடி ஆழ பள்ளத்தில் வேன் பாய்ந்தது; அய்யப்ப பக்தர்கள் 11 பேர் படுகாயம்


திம்பம் மலைப்பாதையில் 25 அடி ஆழ பள்ளத்தில் வேன் பாய்ந்தது; அய்யப்ப பக்தர்கள் 11 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 22 Dec 2017 10:45 PM GMT (Updated: 2017-12-23T03:31:41+05:30)

திம்பம் மலைப்பாதையில், 25 அடி ஆழ பள்ளத்தில் வேன் பாய்ந்தது. அய்யப்ப பக்தர்கள் 11 பேர் படுகாயம் அடைந்தார்கள்.

சத்தியமங்கலம், 

தெலுங்கானா மாநிலம் ரெங்கரெட்டி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சிவா (வயது 24), கைலாஷ் (32), சந்தோஷ் (22), முத்துரெட்டி (25), பிரவீன்குமார் (25), சந்தீப் (27), பரத் (23), காசிநாத் (27), வெங்கடேஷ் (45), மற்றொரு பிரவீன்குமார் (25), வசந்தராஜ் (23). இவர்கள் 11 பேரும் அய்யப்ப மலைக்கு மாலை அணிந்திருந்தார்கள். நேற்று முன்தினம் சபரிமலைக்கு செல்ல ஒரு வேனில் புறப்பட்டார்கள். வேனை சிவா ஓட்டினார்.

11 பேர் படுகாயம்

நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணி அளவில் வேன் ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் வந்துகொண்டு இருந்தது.

2-வது கொண்டை ஊசி வளைவில் வேன் வந்தபோது, எதிரே ஒரு லாரி வந்தது. உடனே சிவா வழிவிடுவதற்காக வேனை திருப்பினார். அப்போது வேன் நிலைதடுமாறி பக்கவாட்டில் உள்ள 25 அடி ஆழ பள்ளத்தில் பாய்ந்தது.

அப்போது வேனுக்குள் இருந்தவர்கள் ஒருவர் மீது ஒருவர் மோதி ‘அய்யோ...அம்மா‘ என்று அலறி துடித்தார்கள் இதில் 11 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது. ஒவ்வொருவராக தட்டுத்தடுமாறி மேலே வந்தார்கள்.

விசாரணை

அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் உடனே 108 ஆம்புலன்சை வரவழைத்து 11 பேரையும் சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்கள்.

அதன்பின்னர் மேல்சிகிச்சைக்காக சிலர் கோவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியிலும், தனியார் மருத்துவமனைகளுக்கும் கொண்டு செல்லப்பட்டார்கள்.

இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story