காந்தி வழியில் ‘கலாசார பயணம்’


காந்தி வழியில் ‘கலாசார பயணம்’
x
தினத்தந்தி 23 Dec 2017 12:15 PM IST (Updated: 23 Dec 2017 11:54 AM IST)
t-max-icont-min-icon

இங்கிலாந்தை சேர்ந்த ஆலி ஹன்டருக்கு, இந்திய கலாசாரத்தின் மீது அளவு கடந்த பிரியம். அதற்காக என்ன செய்தார் தெரியுமா..?

லண்டனிலிருந்து இந்தியாவிற்கு விமானத்தில் பறந்து வந்தவர், இந்தியாவில் இறங்கியது முதல் இன்று வரை பொடி நடையாக நடந்தே நாட்டின் பல பகுதிகளை வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த நடை பயணத்திற்கு ஹன்டர் வைத்த பெயர் என்ன தெரியுமா..?, ‘கலாசார தேடல்’. காஷ்மீரின் லடாக் பகுதியில் நடக்க தொடங்கியவர், தற்போது தமிழகத்தின் தென்பகுதிகளில் தென்படுகிறார். அப்படி நெடுஞ்சாலையில் நடந்து கொண்டிருந்த ஹன்டரை வழிமறித்து, சில கேள்விகளை முன்வைத்தோம். நடந்தபடியே பதிலளித்தார்.

எதற்காக நடை பயணத்தை தேர்ந்தெடுத்தீர்கள்?


“இங்கிலாந்து மக்களுக்கு காந்தியை அதிகமாக பிடிக்கும். ஏனெனில் எங்களது முன்னோர்களை காயப் படுத்தாமல் சுதந்திரம் பெற்றுக்கொடுத்த தலைவர் அவர். அதனால் இங்கிலாந்து மக்கள், காந்தியை கொண்டாடு கிறார்கள். காந்தி மட்டுமின்றி, காந்தி மேற்கொண்ட அகிம்சை போராட்டங்களும் எங்களுக்கு பிடித்திருக்கிறது. குறிப்பாக உப்பு சத்தியாகிரகத்திற்காக காந்தி நடை பயணம் மேற்கொண்ட விதம் என்னை அதிகமாக கவர்ந்தது. அதுவே என்னை இந்தியாவில் நடக்க தூண்டியது. காந்தியின் நினைவுகளை அசைப்போட்டப்படியே இந்திய கலாசாரங்களை ரசித்து கொண்டிருக்கிறேன்”

கலாசாரங்களை ரசிக்கும் ஆசை எப்படி வந்தது?

“என்னுடன் பயின்ற இந்திய தோழி, பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவள். அவள் பஞ்சாப் மக்களின் பாரம்பரிய பழக்கங்களையும், வாழ்க்கை முறையையும் பெருமையாக சொல்வாள். அவளது பேச்சு என்னை இந்தியாவிற்கு அழைத்து வந்தது. ஆனால் பஞ்சாபில் மட்டுமல்ல.... இந்தியா முழுவதுமே கலாசார பழக்கவழக்கங்களால் நிறைந்திருக்கிறது. அதை ரசிக்கவே நடைபயணம் மேற்கொண்டிருக்கிறேன்”

எந்த கலாசாரம் உங்களை அதிகமாக ரசிக்க வைத்தது?


“சிங்’ இன மக்களின் டர்பன், தாடி, அவர்களது இடுப்பை அலங்கரிக்கும் சின்ன குத்துவாள்... போன்றவை என்னை வெகுவாக ரசிக்க வைத்தது. மேலும் கேரளாவின் அழகில் அசந்துபோனேன். பச்சை பசேலென செழித்திருக்கும் கேரளாவை விட்டு விலக மனமே இல்லை. நடை பயணம் முடித்ததும் கேரளாவில் சில மாதங்கள் தங்கியிருந்து சுற்றிப் பார்க்க திட்டமிட்டிருக்கிறேன். சமீபத்தில் தான் தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதால்... தமிழ் மக்களின் கலாசாரங் களையும், பண்பாட்டையும் முழுமையாக சொல்ல முடியவில்லை”

பயணத்தில் கிடைத்த மறக்க முடியாத தருணங்கள் பற்றி?

“ஜம்மு பகுதியில் பயணம் மேற்கொண்டிருந்தபோது, 4 ராணுவ வீரர்கள் என்னை வழிமறித்தனர். எல்லாவிதமான ஆவணங்களும் என்னிடம் சரியாக இருந்தன. இருப்பினும் என்னை உளவாளி போன்று சித்தரித்து பேச ஆரம்பித்தனர். என்னுடைய உடல் படபடக்க ஆரம்பித்தது. பேச்சுகளும் தடுமாறின. என்னுடைய பதற்றத்தை புரிந்து கொண்ட ராணுவ வீரர்கள்... “மன்னித்து விடுங்கள். நாங்கள் விளையாட்டாகத்தான் பேசினோம். தவறுதலாக எடுத்து கொள்ள வேண்டாம். நீங்கள் உங்களுடைய பயணத்தை தொடருங்கள்” என்று என்னை அனுப்பி வைத்தனர். அந்த நிமிடத்தை மனதில் பத்திரமாக பதிந்து வைத்திருக்கிறேன்” என்றவர், கண்ணில் படும் வித்தியாசமான காட்சிகளை வீடியோவாகவும் எடுத்து வருகிறார். அதை ஒரு தொகுப்பாக மாற்றி, ‘இந்திய கலாசாரம்’ என்ற பெயரில் ஆவணப்படம் தயாரிக்க இருக்கிறாராம்.

Next Story