அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவிப்பு: நடிகர் ரஜினிகாந்துக்கு சித்தராமையா உள்பட தலைவர்கள் வாழ்த்து


அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவிப்பு: நடிகர் ரஜினிகாந்துக்கு சித்தராமையா உள்பட தலைவர்கள் வாழ்த்து
x
தினத்தந்தி 1 Jan 2018 4:30 AM IST (Updated: 1 Jan 2018 2:09 AM IST)
t-max-icont-min-icon

அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு சித்தராமையா உள்பட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

பெங்களூரு,

நடிகர் ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிவித்து இருக்கிறார். இதற்காக அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர். கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “சமுதாய சேவை ஆற்றுவதற்காக நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன். அவருக்கு எனது வாழ்த்துகள்“ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

மத்திய மந்திரி சதானந்தகவுடா வெளியிட்டுள்ள செய்தியில், “ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். மோடி பிரதமரான பிறகு அரசியல் மீது ரஜினிகாந்துக்கும் விருப்பம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் ஜனநாயக நடைமுறையில் பங்குகொள்ள அவர் வருகிறார். அவருக்கு நல்லதே நடக்கட்டும். பா.ஜனதாவுடன் சேர்ந்து அவர் செயல்படுவாரா என்பதை வரும் நாட்களில் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்“ என்றார்.

மற்றொரு மத்திய மந்திரி ரமேஷ் ஜிகஜினகி கூறுகையில், “ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது நல்லது. ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அவர் புதிய கட்சியை தொடங்குவதாக கூறி இருக்கிறார். அவர் இவ்வளவு வேகமாக அரசியலுக்கு வருவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவரை அரசியலுக்கு வரவேற்று வாழ்த்துகிறேன்“ என்றார்.

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது கர்நாடகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அவர் தமிழ்நாட்டில் மட்டும் அரசியல் கட்சியை தொடங்குகிறார். ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார். அவருடைய அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். அவருக்கு எனது வாழ்த்துகள்“ என்றார்.

ஷோபா எம்.பி. கூறுகையில், “ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன். நாட்டின் நலன் கருதி அவர் பா.ஜனதாவுடன் கைகோர்த்தால் நல்லது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதால் தமிழக அரசியலில் ஒரு உற்சாகம் ஏற்பட்டுள்ளது“ என்றார்.

பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் துணை முதல்-மந்திரி ஆர்.அசோக் கூறுகையில், “ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன். அவர் வரும் நாட்களில் தமிழ்நாட்டின் முதல்-மந்திரி ஆகட்டும். பா.ஜனதாவுடன் அவருக்கு நல்ல உறவு இருக்கிறது. அவர் நம்மவர். கர்நாடக அரசு போக்குவரத்து துறையில் நடத்துனராக பணியாற்றிவர். அவருக்கு நல்லது நடக்கட்டும்“ என்றார்.

இது தவிர நடிகைகள் தாரா, ஜெயமாலா உள்பட கன்னட திரையுலகினரும் அரசியலுக்க வர உள்ள ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.


Next Story