கன்னியாகுமரி துறைமுக ஆதரவு இயக்கத்தினர் கூட்டம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு


கன்னியாகுமரி துறைமுக ஆதரவு இயக்கத்தினர் கூட்டம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
x
தினத்தந்தி 1 Jan 2018 4:30 AM IST (Updated: 1 Jan 2018 2:09 AM IST)
t-max-icont-min-icon

இலந்தையடிவிளையில் நடந்த கன்னியாகுமரி துறைமுக ஆதரவு இயக்கத்தினர் கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

தென்தாமரைகுளம்,

கன்னியாகுமரி அருகே உள்ள கோவளத்தில் இருந்து கீழமணக்குடி வரையிலான கடல் பகுதியில் வர்த்தக துறைமுகம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

அதே சமயம் வர்த்தக துறைமுகம் அமைக்க வேண்டும் என்று கன்னியாகுமரி துறைமுக ஆதரவு இயக்கத்தினர் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த கோரிக்கையை வலியுறுத்தி இலந்தையடிவிளை மேற்கு கடற்கரை சாலையில் கன்னியாகுமரி துறைமுக ஆதரவு இயக்கத்தினர் கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதற்கு துறைமுக ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் வேல்பாண்டியன் தலைமை தாங்கினார். அய்யாவழி போதகர் சிவசந்திரன், பேராசிரியர் டி.சி.மகேஷ், தென்தாமரைகுளம் கூட்டுறவு வங்கி தலைவர் வளன்அரசு, அ.தி.மு.க. பிரமுகர் கவிஞர் சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பா.ஜனதா மாவட்ட துணை தலைவர் முத்துராமன், நிர்வாகி தர்மலிங்கம் உடையார், நாகர்கோவில் நகரசபை முன்னாள் தலைவர் மீனாதேவ், அ.தி.மு.க. பிரமுகர் தங்க நாடார் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள், குமரிக்கு துறைமுகம் வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.

அதைத்தொடர்ந்து குமரி துறைமுக திட்டம் குறித்து ஒரு அடையாள அட்டையை வெளியிட்டார்கள். அதை முன்னாள் எம்.எல்.ஏ. குமாரதாஸ் வெளியிட்டார். அந்த அட்டையில் குமரி துறைமுகம் எங்கள் வாழ்க்கை என்று எழுதப்பட்டு, அதில் துறைமுக வரைபடமும் உள்ளது.

கூட்டத்தில் கவிஞர் சதாசிவம் பேசும் போது,‘துறைமுகம் அமைக்க மத்திய அரசு ரூ.19 ஆயிரத்து 500 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதில் 30 சதவீதம் அதாவது ரூ.5 ஆயிரத்து 850 கோடி சுற்றுப்பகுதி முன்னேற்றத்திற்காக செலவிடப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் வர்த்தகம் பெருகும். பண புழக்கம் அதிகரிக்கும். மேலும் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இது நமக்கு கிடைத்த ஒரு பொன்னான வாய்ப்பு ஆகும். இதை நாம் தவற விட்டு விடக்கூடாது.‘ என்றார்.

கூட்டம் மாலை 4 மணிக்கு தொடங்கி 6.30 மணி வரை நடைபெற்றது. இதனால் மேற்கு கடற்கரை சாலையில் சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால் மேற்பார்வையில், கன்னியாகுமரி இன்ஸ்பெக் டர் ஜெயச்சந்திரன், தென் தாமரைகுளம் சப்-இன்ஸ்பெக்டர் டோன் போஸ்கோ மற்றும் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர். 

Next Story