‘புதுச்சேரியின் அத்தியாயத்தில் புத்தொளி பிறக்கட்டும்’ நாராயணசாமி ஆங்கில புத்தாண்டு வாழ்த்து


‘புதுச்சேரியின் அத்தியாயத்தில் புத்தொளி பிறக்கட்டும்’ நாராயணசாமி ஆங்கில புத்தாண்டு வாழ்த்து
x
தினத்தந்தி 1 Jan 2018 5:30 AM IST (Updated: 1 Jan 2018 2:37 AM IST)
t-max-icont-min-icon

முதல்–அமைச்சர் நாராயணசாமி விடுத்துள்ள ஆங்கில புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ‘புதுச்சேரியின் அத்தியாயத்தில் புத்தொளி பிறக்கட்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

முதல்–அமைச்சர் நாராயணசாமி ஆங்கில புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–

பல மாற்றங்களையும், ஏற்றங்களையும் தந்த 2017–ம் ஆண்டு விடைபெற்று 2018–ம் ஆண்டு பிறக்கும் இனிய நாள் இதுவாகும். இன்னல்களை துறந்து, மனமாச்சர்யங்களை மறந்து பிறக்கப்போகும் புத்தாண்டு நம் வாழ்வில் புதிய அத்தியாயத்தை தொடங்கி மகிழ்ச்சியை மலரச் செய்யும் என்ற நம்பிக்கையோடு 2018ம் ஆண்டினை நாம் அனைவரும் வரவேற்க தயாராக வேண்டும்.

சென்ற வருடம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் எங்கள் அரசு புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் வளமான எதிர்கால வாழ்விற்கும் தேவையான பல நல்ல திட்டங்களை போராடிப் பெற்றுள்ளது என எண்ணும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நம் மக்கள் இயல்பாகவே நாகரிகம் மிகுந்தவர்கள். அவர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காதவர்களையும் மன்னித்து நாகரிகமாக ஏற்றுக்கொள்ளும் பண்பை பெற்றவர்கள். நமக்கு இன்னல் ஏற்படுத்த எண்ணுவோர் புறமுதுகிட்டு செல்லும் ஆண்டாக இந்த புத்தாண்டு இருக்கட்டும். புதுச்சேரியின் அத்தியாயத்தில் புத்தொளி பிறக்கட்டும்.

பல சோதனைகளை சந்தித்தாலும் 17 சிறிய மாநிலங்களில் முதன்மையானது நமது மாநிலம். சுற்றுலா மற்றும் சட்டம்– ஒழுங்கை கட்டுக்குள் வைப்பதில் முதல் இடத்தை பெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் ஸ்மார்ட் சிட்டி திட்டம் ரூ.1,850 கோடியிலும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் திட்டம் ரூ.575 கோடியிலும், நிறைவேற்ற உள்ளோம். புதுச்சேரியில் உள்ள மாகி சுத்தமான நகரம் என்று முதலிடம் பெற்றுள்ளது.

2018–ம் ஆண்டு புதுச்சேரி மாநிலம் வளர்ச்சி பெறுகின்ற மாநிலம் என்ற பெருமையை அனைவரும் ஒருங்கிணைந்து நிலைநாட்டுவோம். இந்த நன்னாளில் பிறக்கப்போகும் புத்தாண்டு புதுச்சேரி மக்கள் அனைவரது வாழ்வில் புத்தொளியையும், மகிழ்ச்சியையும், வளத்தையும், நலத்தையும் வழங்கிட வேண்டும் என உளமாரப் பிரார்த்தனை செய்கிறேன். புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சபாநாயகர் வைத்திலிங்கம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–

புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஆங்கில புத்தாண்டு உலகம் முழுக்க அனைவராலும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் ஆங்கில புத்தாண்டு ஜாதி, மத இன வேறுபாடு இன்றி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு இலக்கை நிர்ணயித்து கொண்டாடி வருகின்றனர்.

இதேபோல் 2018–ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரி மக்கள் அனைவரும் நல்ல இலக்கை அமைத்து கொண்டாடவும், அதில் வெற்றி பெற வேண்டும் என்றும் கூறி மீண்டும் ஒருமுறை புதுச்சேரி யூனியன் பிரதேச மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் ஷாஜகான் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–

புதுச்சேரி மாநில மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஆங்கில புத்தாண்டானது இன்று தான் நாம் பிறந்தோம் என்ற எண்ணத்தை உலக மக்கள் அனைவரின் மனதிலும் பதிய வைத்த பெருமை மிக்கது. மக்கள் அனைவரும், நாடு மொழி, இனம், மதம், பண்பாடு, கலாசாரம், உயர்வு, தாழ்வு ஆகியவற்றை கடந்தும், வேறுமைகளை மறந்தும் எல்லோரும் ஒற்றுமைக்கு வழிவகுக்கும் ஒரு ஒப்பற்ற உலகத்திருவிழா இந்த ஆங்கில புத்தாண்டு என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்று.

ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்கிற மேன்மையை உலகத்திற்கு எடுத்துக்காட்டும் விழா இந்த ஆங்கில புத்தாண்டாகும். இந்த ஆங்கில புத்தாண்டு புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் வறுமைகளை நீக்கும் ஆண்டாக அமையட்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story