தியாகதுருகம் அருகே புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை போலீசில் தாயார் புகார்
தியாகதுருகம் அருகே புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தாயார் புகார் கொடுத்துள்ளார்.
கண்டாச்சிமங்கலம்,
விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள மேல்விழியை சேர்ந்தவர் ஜோசப். இவருக்கும் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கோவிலான்குப்பத்தை சேர்ந்த திவ்யநாதன் மகள் அமலோற்பவமேரி (வயது 28) என்பவருக்கும் கடந்த 5 மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது பெண் வீட்டார் ஜோசப்புக்கு 7 பவுன் நகையும், ஒரு மோட்டார் சைக்கிளும் வாங்கி கொடுப்பதாக கூறியிருந்தனர்.
ஆனால் 3 பவுன் நகை மற்றும் மோட்டார் சைக்கிள் மட்டும் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் திருமணம் ஆனது முதல் ஜோசப் அமலோற்பவமேரியிடம் வரதட்சணையாக கூடுதல் நகைகள் வாங்கி வரும்படி கூறி துன்புறுத்தி வந்தார். அதற்கு அமலோற்பவமேரி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதன் காரணமாக ஜோசப், கடந்த நவம்பர் மாதம் அமலோற்பவமேரியை அவரது பெற்றோர் வீட்டில் கொண்டு சென்று விட்டார். இந்த நிலையில் வீட்டில் வேலை செய்ய யாரும் இல்லாததால் அமலோற்பவமேரியை ஜோசப் மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்தார். அதன் பின்னரும் தினசரி ஜோசப், பெற்றோர் வீட்டில் இருந்து கூடுதலாக நகை வாங்கி வரும்படி கூறி அமலோற்பவமேரியை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அமலோற்பவமேரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுபற்றி ஜோசப்பின் உறவினர்கள் அமலோற்பவமேரியின் தாயார் ரெபேக்காளுக்கு(50) தகவல் தெரிவித்தனர்.
இதற்கிடையில் இதுபற்றி தகவல் அறிந்த தியாகதுருகம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட அமலோற்பவமேரியின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மகளின் சாவு குறித்து ரெபேக்காள் தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் ‘‘கடந்த 2 நாட்களுக்கு முன்பு அமலோற்பவமேரி செல்போனில் என்னை தொடர்பு கொண்டு, ஜோசப் வரதட்சணை கேட்டு அடித்து கொடுமைப்படுத்துவதாக கூறி கதறி அழுதார். இதனால் எனது மகள் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை. அவளது சாவில் எனக்கு சந்தேகம் உள்ளது’’ என்று கூறியிருந்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமான 5 மாதத்திலேயே அமலோற்பவமேரி இறந்துள்ளதால் அவரது சாவு குறித்து கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கோமதி மற்றும் கோட்டாட்சியர் மல்லிகா ஆகியோரும் விசாரிக்கின்றனர்.