அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு இடையூறாக இருந்த 10 கடைகள் அகற்றம்
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு இடையூறாக இருந்த 10 கடைகள் அகற்றப்பட்டது. அப்போது ஒரு பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அந்தியூர்,
அந்தியூர் பஸ் நிலையம் அருகே பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் 10 பூஜை கடைகள் உள்ளன. இவர்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் தங்கள் கடையில் பூஜை பொருட்கள் வாங்குமாறு கூறி வற்புறுத்தி வருகிறார்கள். மேலும் தொழில் போட்டி காரணமாக அவர்களுக்குள் தகாத வார்த்தையில் பேசி சண்டையிட்டு கொள்கிறார்கள். இது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறை ஏற்படுத்துகிறது. எனவே கோவில் வளாகத்தில் உள்ள 10 பூஜை கடைகளையும் உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் இந்து அறநிலையத்துறைக்கு புகார் மனு அனுப்பினார்கள்.
இதைத்தொடர்ந்து இந்து அறநிலையத்துறையினர், கடை உரிமையாளர்களிடம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது. மேலும் இந்துஅறநிலையத்துறைக்கு செலுத்த வேண்டிய ரூ.6லட்சம் ஏல பாக்கியை செலுத்த வேண்டும். இல்லையென்றால் கடை அகற்றப்படும் என்று கடந்த 10 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் கொடுத்தார்கள். ஆனால் கடைகள் அகற்றப்படவில்லை.
இதையடுத்து நேற்று காலை அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், வருவாய் ஆய்வாளர் விஜயலட்சுமி, இந்து அறநிலையத்துறையினர் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்து கடைகளை அகற்றுமாறு அதன் உரிமையாளர்களிடம் கூறினார்கள். அதற்கு அனைவரும் மறுப்பு தெரிவித்தார்கள்.
இதைத்தொடர்ந்து வருவாய்த்துறை பணியாளர்கள் தள்ளுவண்டி உதவியுடன் அங்கிருந்த கடைகளை அப்புறப்படுத்தி கொண்டிருந்தார்கள். இதற்கு ஒரு கடை பெண் உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்து தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்கள். உடனே அங்கிருந்த போலீசார் அவரிடம் இருந்து மண்எண்ணெய் கேனை பிடுங்கி தடுத்து நிறுத்தினார்கள்.
பின்னர் அங்கிருந்த 10 கடைகளும் அகற்றப்பட்டது.
கடையை அகற்றியபோது பெண் தீக்குளிக்க முயன்றதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.