காஞ்சீபுரம் மாவட்டத்தில், கடந்த ஆண்டு சாலை விதிகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் ரூ.4 கோடி அபராதம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு சாலை விதிகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.3 கோடியே 99 லட்சத்து 40 ஆயிரத்து 829 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி தெரிவித்துள்ளார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:–
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த 2017–ம் ஆண்டு 657 திருட்டு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 494 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரூ.7 கோடியே 40 லட்சத்து 4 ஆயிரத்து 543 மதிப்பிலான பொருட்கள் திருட்டு போனதில் ரூ.5 கோடியே 53 லட்சத்து 45 ஆயிரத்து 860 மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
பழைய குற்றவாளிகள் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடாமல் தடுக்கும் பொருட்டு 910 பழைய குற்றவாளிகள் பேரிலும், பொது அமைதி காக்க 34 நபர்கள் பேரிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு எதிராக செயல்பட்ட ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகள் 79 பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் நீதிமன்ற விசாரணையை துரிதப்படுத்தி கொலை குற்றவாளிகள் 12 பேருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டுள்ளது
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கள்ள சாராயத்தை முற்றிலும் ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2017–ம் ஆண்டில் மது விலக்கு தொடர்பாக 4 ஆயிரத்து 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 762 பெண்கள் உள்பட 4,195 மதுவிலக்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
மதுவிலக்கு வேட்டையின்போது 69 ஆயிரத்து 862 மதுபாட்டில்களும், 20 ஆயிரத்து 373 லிட்டர் எரிசாராயமும், மது கடத்தலுக்கு பயன்படுத்திய 22 நான்கு சக்கர வாகனங்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள், 50 இரண்டு சக்கர வாகனங்கள் என 74 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் 1,342 லிட்டர் கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.
மதுவிலக்கு வேட்டையில் கைப்பற்றப்பட்ட 52 வாகனங்கள் பொது ஏலம் விடப்பட்டு ரூ.32 லட்சத்து 32 ஆயிரத்து 596 அரசுக்கு ஆதாயம் தேடப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டு வந்த 20 பேர் மதுவிலக்கு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 99 பேர் மதுவிலக்கு மற்றும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் வாகன விபத்தை தடுக்கும் பொருட்டு பல்வேறு விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக கடந்த 2016–ம் ஆண்டை காட்டிலும் 2017–ம் ஆண்டில் வாகன விபத்துகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. 2017–ம் ஆண்டு 3,179 வாகன விபத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 980 பேர் வாகன விபத்தில் இறந்துள்ளனர். 3,206 நபர்கள் காயம் அடைந்துள்ளனர். கடந்த 2016–ம் ஆண்டில் 3,507 வாகன விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 1,057 நபர்கள் உயிரிழந்தனர். 3,623 நபர்கள் காயம் அடைந்தனர்.
மோட்டார் வாகன சட்டத்தின்படி சாலை விதிகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.3 கோடியே 99 லட்சத்து 40 ஆயிரத்து 829 அபராதம் வசூலிக்கப்பட்டு அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
குடிபோதையில் வாகனம் ஓட்டிய 7,047 நபர்கள் மீதும், பிற விதிமீறல் வாகன வழக்குகளிலும் சேர்த்து மொத்தம் 9,030 நபர்களின் வாகன ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பொதுமக்கள் மற்றும் சாலைகளை பயன்படுத்துபவர்கள் சாலை விதிகளை தெரிந்துகொள்ளும் பொருட்டு காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் 5,957 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டது. 2017–ம் ஆண்டில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் சட்டம்–ஒழுங்கு, குற்றத்தடுப்பு, மதுவிலக்கு மற்றும் போக்குவரத்து பிரிவுகளில் பணிபுரியும் போலீசார் அனைவரும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.