பெண் உள்பட 3 பேரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1லட்சம் நூதன திருட்டு


பெண் உள்பட 3 பேரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1லட்சம் நூதன திருட்டு
x
தினத்தந்தி 1 Jan 2018 3:45 AM IST (Updated: 1 Jan 2018 3:56 AM IST)
t-max-icont-min-icon

ஏ.டி.எம். கார்டு ரகசிய எண்ணை பெற்று பெண் உள்பட 3 பேரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1லட்சம் நூதனமான முறையில் திருடியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி,

திருச்சி மாவட்டம் துறையூர் நாயக்கன்பட்டி எரகுடியை சேர்ந்தவர் கணேசன். இவரை கடந்த செப்டம்பர் மாதம் 23-ந் தேதி செல்போனில் ஒருநபர் தொடர்பு கொண்டார். அந்த நபர் தன்னை ஜங்ஷன் பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் மேலாளர் என்று கூறினார். தொடர்ந்து கணேசனிடம் வங்கி ஏ.டி.எம். கார்டு ரகசிய எண்ணை தரும்படி கேட்டுள்ளார். இதை உண்மை என்று நம்பிய கணேசனும் தனது ஏ.டி.எம். கார்டு ரகசிய எண்ணை அவரிடம் கூறி உள்ளார். சில நாட்களுக்கு பிறகு அவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம் ஆன்லைன் வர்த்தகம் மூலம் எடுக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இந்த நூதன திருட்டால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் புகார் அளித்தார்.

மேலும் 2 பேரிடம்...

இதேபோல திருச்சி செந்தண்ணீர்புரம் முத்துமணி டவுன் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன். இவரை கடந்த நவம்பர் மாதம் 9-ந் தேதி ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது அந்த நபர் தன்னை வங்கி மேலாளர் என்று கூறி அறிமுகப்படுத்தி கொண்டார். தொடர்ந்து வங்கி ஏ.டி.எம் ரகசிய எண்ணை தரும்படி கேட்டுள்ளார். இதனை நம்பி கருணாகரனும் ஏ.டி.எம். ரகசிய எண்ணை கொடுத்துள்ளார். சில நாட்களுக்கு பிறகு அவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.39 ஆயிரத்து 995 ஆன்லைன் வர்த்தகம் மூலம் நூதனமாக முறையில் திருடப்பட்டு இருந்தது.

திருச்சி எல்.ஐ.சி.காலனி சேரன்சாலை பகுதியை சேர்ந்தவர் மணிவேல் மனைவி சாரதா சாந்தியிடமும் வங்கி மேலாளர் பேசுவது போல ஒருவர் பேசி அவரிடமும் வங்கி விவரங்களையும், ஏ.டி.எம்.ரகசிய எண்ணையும் பெற்று அவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.9 ஆயிரம் ஆன்லைன் வர்த்தகம் மூலம் திருடப்பட்டு இருந்தது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து அவர்கள் மாநகர துணை கமிஷனர் சக்திகணேசிடம் தனித்தனியாக புகார் கொடுத்தனர். இந்த 3 புகார்கள் குறித்தும் மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, வங்கி மேலாளர் பேசுவது போல் நடித்து ரூ.99ஆயிரத்து 995-ஐ நூதனமான முறையில் திருடிய மர்ம நபர்களை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story