கோவை அருகே புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு வந்தபோது லாரி மீது கார் மோதி 3 பேர் சாவு
கோவை அருகே புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு வந்தபோது சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதியதில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
கோவை,
நாமக்கல் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். அவருடைய மகன் ராகுல் (வயது 19). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2–ம் ஆண்டு என்ஜினீயரிங் படித்து வந்தார். திருப்பூரில் கேண்டீன் நடத்தி வருபவர் பிரசாந்த் (24). திருப்பூர் காந்திநகரை சேர்ந்தவர்கள் காலிப் (19), தியாகு (22), நவீன் (19), சதாம் உசேன் (19), சுரேஷ் (19), மற்றொரு நவீன் (19). இவர்கள் அனைவரும் ராகுலின் நண்பர்கள்.
இவர்கள் 8 பேரும் கோவையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள நேற்று முன்தினம் இரவில் ஒரு காரில் திருப்பூரில் இருந்து அவினாசி ரோடு வழியாக கோவை வந்து கொண்டு இருந்தனர். காரை பிரசாந்த் ஓட்டினார்.
நள்ளிரவு 12 மணிக்குள் கோவை வந்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்ற பிரசாந்த் காரை வேகமாக ஓட்டியதாக தெரிகிறது. கார் நள்ளிரவு 11.45 மணிக்கு கோவையை அடுத்த நீலாம்பூர் தென்னம்பாளையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு பஞ்சர் ஆன லாரி ஒன்று சாலையோரம் நின்றது. வேகமாக வந்த சொகுசு கார் கண் இமைக்கும் நேரத்தில் அந்த லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது.
இதில் காரின் முன்பகுதி அப்பளம்போன்று நொறுங்கியது. காரை ஓட்டி வந்த பிரசாந்த், கல்லூரி மாணவர் ராகுல், காலிப் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மற்ற 5 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சூலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உயிருக்கு போராடியவர்களை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். போலீசார் பலியான 3 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விபத்தில் பலியான பிரசாந்த் கோவை அருகே உள்ள க.க.சாவடி பகுதியை சேர்ந்தவர். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் ரெஜினா என்ற பெண்ணை திருமணம் செய்தார். அவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். விபத்து குறித்து தகவல் அறிந்த ரெஜினா, கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து கணவரின் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.