டீசலில் கலப்படம் செய்வதாக புகார் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் முற்றுகை
பொள்ளாச்சி அருகே டீசலில் கலப்படம் செய்வதாக புகார் எழுந்ததால் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி அருகே வடக்கிபாளையத்தில் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு டீசலில் மண்எண்ணெய் கலந்து விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெட்ரோல் விற்பனை நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் கலப்பட டீசல் போட்டதால் சரக்கு ஆட்டோ பழுதானதாக கூறி, அந்த வாகனத்தை விற்பனை நிலையத்திற்கு மற்றொரு வாகனம் மூலம் கயிறு கட்டி இழுத்து வந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வடக்கிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சமாதானம் அடையாத அவர்கள், டீசலில் மண்எண்ணெய் கலந்து விற்பனை செய்வதால் வாகனங்கள் பழுதாகி விட்டது. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதையடுத்து பெட்ரோல் விற்பனை நிலையத்தில் உள்ள டீசல் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி ஆய்வு செய்யப்படும். இதில், கலப்படம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டால் உரிய இழப்பீடு பெற்று தரப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து தனியார் பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் கூறுகையில், எங்களது பெட்ரோல் விற்பனை நிலையத்தில் கலப்படம் எதுவும் செய்யப்படவில்லை. காலையில் இருந்து ஏராளமான வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களுக்கு டீசல் போட்டு சென்று உள்ளனர். ஆனால் எந்தவித புகாரும் வரவில்லை. சிலர் வேண்டும் என்றே தவறான புகார்களை தெரிவித்து வருகின்றனர். எனவே, இந்த டீசலை ஆய்வு கூடத்திற்கு அனுப்ப முடிவு செய்து உள்ளேன் என்றார்.