புதுவையில் பிளஸ்–1 மாணவியை கடத்தி கட்டாய திருமணம் வாலிபர் உள்பட 4 பேர் கைது
புதுவையில் பிளஸ்–1 மாணவியை கடத்தி கட்டாய திருமணம் செய்த வாலிபர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி,
புதுவை முதலியார்பேட்டையில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் படித்து வந்த பிளஸ்–1 மாணவியை காணவில்லை என அவரின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்–இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர்.
இதற்கிடையே புதுவை சண்முகாபுரம் பகுதியை சேர்ந்த சக்திபாலன் (22) என்பவர் பிளஸ்–1 மாணவியை காரில் கடத்தி சென்று கோவிலில் கட்டாய திருமணம் செய்திருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.
மேலும் விழுப்புரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து மாணவியுடன், சக்திபாலன் தங்கியிருப்பதும் தெரியவந்தது. அதையடுத்து போலீசார் விழுப்புரத்திற்கு விரைந்தனர். இதுபற்றி அறிந்தவுடன் சக்திபாலன், மாணவியுடன் வேறு இடத்திற்கு தலைமறைவானார்.
இதற்கிடையே சக்திபாலனும், மாணவியும் விழுப்புரத்தில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியிருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று சக்திபாலனை கைது செய்தனர். மேலும் சக்திபாலனுக்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய தாயார் ஆதிலட்சுமி, தந்தை அய்யனார் மற்றும் உறவினர் ராசாத்தி ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் மாணவியை மீட்டு அவரின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.