ஆங்கில புத்தாண்டையொட்டி சேலம் கோவில்களில் சிறப்பு பூஜை


ஆங்கில புத்தாண்டையொட்டி சேலம் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 2 Jan 2018 4:00 AM IST (Updated: 2 Jan 2018 3:00 AM IST)
t-max-icont-min-icon

ஆங்கில புத்தாண்டையொட்டி சேலம் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

சேலம்,

2018-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு உலகம் முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. புதியதாக பிறந்த புத்தாண்டு வளமான ஆண்டாகவும், நோய் நொடியின்றி மகிழ்ச்சியான ஆண்டாக அமைய வேண்டியும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.

வினைகளை தீர்க்கும் விநாயகர் என்று போற்றப்படும் சேலம் ராஜகணபதி கோவிலில் ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி, காலை முதல் ராஜகணபதிக்கு விசேஷ அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும், ராஜகணபதிக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் ராஜகணபதியை தரிசனம் செய்தனர்.

கோட்டை மாரியம்மன் கோவிலில் புத்தாண்டையொட்டி, காலை சிறப்பு அபிஷேகம், மற்றும் பூஜைகள் நடைபெற்றன. உற்சவர் கோட்டை மாரியம்மனுக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர்.

சேலம் சுகவனேசுவரர் கோவிலில் புத்தாண்டையொட்டி சுகவனேசுவரர்-சொர்ணாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதேபோல், சேலம் செரி ரோட்டில் உள்ள எல்லைபிடாரியம்மன் கோவிலில் புத்தாண்டையொட்டி மாரியம்மனுக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டது. மேலும், அம்மன் முத்தங்கி அலங்காரத்திலும் அருள்பாலித்தார். இதையொட்டி நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். கோட்டை பெருமாள் என்றழைக்கப்படும் அழகிரிநாதர் சுவாமி கோவிலில் மூலவர் பெருமாள், தாயார், ஆண்டாள், கருடாழ்வார் ஆகியோருக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆஞ்சநேயர் வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சேலம் ஜாகீர்அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் புத்தாண்டு பிறப்பையொட்டி காலை விஸ்வரூப பெருமாள் பூஜை ஹோமம், சர்வதேவதா ஹோமம், கலசாபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. காவடி பழனியாண்டவர் வள்ளி-தெய்வானையுடன் தங்கக்கவசத்தில் அருள்பாலித்தார். மாலை 6.30 மணிக்கு தங்கரத புறப்பாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சேலம் டவுன் ரெயில்வே ஸ்டேஷன் அருகே அய்யப்பன் பஜனை மண்டலி தர்மசாஸ்தா ஆசிரமத்தில் அதிகாலை விநாயகர், சுப்பிரமணியர், அய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து மாலையில் புஷ்பாஞ்சலி, படி பூஜையும், இரவில் சாமி புறப்பாடு நிகழ்ச்சியும் நடந்தது.

சேலம்-பெங்களூரு பைபாஸ் ரோட்டில் உள்ள ஸ்ரீ அய்யப்பா ஆசிரமத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி காலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை 6 மணிக்கு நெய் அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து இனிப்பு பிரசாதமும், பகல் அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரி நடந்தது.

சேலம் பெரமனூர் வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி அதிகாலை விநாயகர், ஆண்டாள், ஆஞ்சநேயர் மற்றும் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர், பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. பெரமனூர் கந்தசாமி கோவிலில் மூலவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. வள்ளி, தெய்வானையுடன் உற்சவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

சேலம் அரிசிபாளையம் தெப்பகுளம் அருகில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி காலையில் கோமாதா பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து சித்தி விநாயகருக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டது. சித்தி விநாயகர் தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

சேலம் அடிவாரத்தில் உள்ள ஆறுபடை முருகன் கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. பஞ்சமுக கணபதி வெள்ளிக்கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் பலர் அர்ச்சனை செய்து வழிபட்டனர். சின்னகொல்லப்பட்டி சீரடி சாய்பாபா கோவிலிலும் பக்தர்கள் சாமியை வழிபட்டனர். கோரிமேடு வீரபக்த ஆஞ்சநேயர் கோவிலிலும் தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. ஆஞ்சநேயர் தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சேலம் பேர்லண்ட்ஸ் முருகன் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு தீபாராதனை மற்றும் வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதேபோல், ஊத்துமலை முருகன் கோவில், குமரகிரி தண்டாயுதபாணி சுவாமி கோவில், அம்மாபேட்டை செங்குந்தர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், பாண்டுரெங்கநாதர் கோவில், பட்டைக்கோவில் வரதராஜபெருமாள் கோவில், நெடுஞ்சாலை நகர் வரசித்தி விநாயகர் கோவில், சேலம் ராஜாராம் நகர் தேவராஜ கணபதி கோவில், சின்னதிருப்பதி வெங்கடாசலபதி கோவில், வெண்ணங்குடி முனியப்பன் கோவில், செவ்வாய்பேட்டை பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் உள்பட சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

Next Story