ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது


ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 1 Jan 2018 10:15 PM GMT (Updated: 1 Jan 2018 9:30 PM GMT)

எடப்பாடி அருகே ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம்,

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே நெடுங்குளம் எல்லமடை கானாகாடு வளைவு பகுதியில் கடந்த மாதம் ரேஷன் அரிசி கடத்தி வந்த லாரி ஒன்று விபத்தில் சிக்கியது. இது குறித்து தகவலறிந்த சேலம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் எடப்பாடி, பூலாம்பட்டி, பவானி பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை சிலர் வாங்கி, அதை பூலாம்பட்டியில் உள்ள ஒரு தோட்டத்தில் பதுக்கி வைத்து அங்கிருந்து பெங்களூருவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து விபத்தில் சிக்கிய லாரியில் இருந்த 10 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட ஏற்காடு சத்யாநகரை சேர்ந்த சிவசக்தி, செட்டிமாங்குறிச்சி கோவிந்தராஜ், சண்முகம், கோவிந்தன், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த இளவரசன், மோளபாளையம் சக்திவேல், நாமக்கல்லை சேர்ந்த கோவிந்தராஜ், ஹரிஹரன், டேவிட், லாரி டிரைவர் கேசவராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

இந்தநிலையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த இளவரசன், சக்திவேல், நாமக்கல்லை சேர்ந்த கோவிந்தராஜ் ஆகியோர் மீது ஏற்கனவே ரேஷன் அரிசி கடத்தல் வழக்கு உள்ளன. இவர்கள் 3 பேரும் தொடர்ந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜன், மாவட்ட கலெக்டர் ரோகிணிக்கு பரிந்துரை செய்தார்.

இதனை பரிசீலனை செய்த கலெக்டர், அவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய நேற்று உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி சேலம் மத்திய சிறையில் உள்ள இளவரசன் உள்பட 3 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இதற்கான நகலை சிறையில் உள்ள அவர்களிடம் போலீசார் வழங்கினர். 

Next Story