விபத்தில் சிக்கியவர்களை மீட்டுச்சென்ற ஆம்புலன்ஸ் மீது சுற்றுலா வேன் மோதல்; வாலிபர் பரிதாப சாவு


விபத்தில் சிக்கியவர்களை மீட்டுச்சென்ற ஆம்புலன்ஸ் மீது சுற்றுலா வேன் மோதல்; வாலிபர் பரிதாப சாவு
x
தினத்தந்தி 2 Jan 2018 3:45 AM IST (Updated: 2 Jan 2018 3:01 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் சிக்கியவர்களை மீட்டுச்சென்ற ஆம்புலன்ஸ் மீது சுற்றுலா வேன் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மோகனூர்,

நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்த சுந்தரராஜன் என்பவருடைய மகன் நவீன் (வயது 23). இவர் மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு வலையப்பட்டியில் இருந்து மோகனூருக்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது ஊனாங்கல்பட்டி அருகே வந்த போது சாலையில் நடந்து சென்ற அதேபகுதியை சேர்ந்த தங்கவேல் (37) என்பவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் நவீன், தங்கவேல் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த ஆம்புலன்சை மோகனூரை சேர்ந்த சரவணன் என்பவர் ஓட்டி சென்றார். நாமக்கல் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த சுற்றுலா வேன் ஆம்புலன்ஸ் மீது மோதியது. இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் சரவணனும் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மற்றொரு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

வாலிபர் பரிதாப சாவு

அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது வாலிபர் நவீன் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. படுகாயம் அடைந்த தங்கவேல், சரவணன் ஆகிய 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து மோகனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விபத்தில் இறந்த நவீனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story