ரஜினியின் சொந்த ஊரில் புதிய மன்றங்கள் அமைக்கும் பணி தொடக்கம்


ரஜினியின் சொந்த ஊரில் புதிய மன்றங்கள் அமைக்கும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 1 Jan 2018 11:00 PM GMT (Updated: 2018-01-02T03:01:15+05:30)

ரஜினியின் சொந்த ஊரான நாச்சிகுப்பத்தில் புதிய மன்றங்கள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது என மாவட்ட தலைவர் மதியழகன் கூறினார்.

கிருஷ்ணகிரி,

அரசியலில் ஈடுபட போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். மேலும் அவர் ரசிகர்களிடம் பேசும் போது, பதிவு செய்யப்படாத மன்றங்களை பதிவு செய்து ரசிகர்களை மன்றங்களில் இணைக்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு ரஜினிகாந்த் உத்தரவிட்டார்.

இதையடுத்து ரஜினியின் சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியை அடுத்த நாச்சிகுப்பத்தில் புதிய மன்றங்கள் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவர் மதியழகன் தலைமை தாங்கி புதிய மன்றத்தை தொடங்கி வைத்தார்.

மேலும் நாச்சிகுப்பத்தில் ரஜினியின் பெற்றோர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள ரானோஜிராவ் ராம்பாய் பொது நல அறக்கட்டளை முன்பு ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் காலண்டர் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் மதியழகன் கூறியதாவது:-

ரஜினிகாந்த் தமிழர் இல்லை என்று சில அரசியல்வாதிகள் கூறி வருகிறார்கள். இதை தவிடு பொடியாக்கும் விதமாக தமிழ்நாட்டில் ரஜினிகாந்த் சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிகுப்பத்தில் புதிய மன்றங்களை அமைக்கும் பணியை ஆரம்பித்துள்ளோம்.

தமிழக மக்கள் ரஜினிக்கு துணையாக இருப்பார்கள். சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் அவரது சொந்த ஊரான வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட பொறுப்பாளர் முத்து, ஒன்றிய நிர்வாகிகள் யுவராஜ், காளியப்பன், கோவிந்தசாமி, மணி, ரஜினி சரவணன், பழனி, ராஜா, பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story