புனே அருகே இருதரப்பினரிடையே பயங்கர மோதல் வாகனங்கள் தீ வைத்து எரிப்பு
புனே அருகே இருதரப்பினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
புனே,
புனே மாவட்டம் கோரேகாவ் பீமா பகுதியில் நடந்த ஒரு சமுதாய நிகழ்ச்சியின் போது, பாடல் ஒலிபரப்பியதில் அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கும், இன்னொரு சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கும் இடையே கடந்த சில தினங்களுக்கு முன் தகராறு உண்டானது.
இந்த நிலையில், நேற்று இரு தரப்பை சேர்ந்தவர்களும் திடீரென பயங்கரமாக மோதிக் கொண்டனர். அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கினார்கள். மேலும் சில வாகனங்கள் தீ வைத்தும் கொளுத்தப்பட்டன.
ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசியும் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதனால் இந்த மோதல் சம்பவம் பற்றி அறிந்ததும் அங்கு போலீசார் விரைந்து வந்தனர்.
அவர்களை சமாதானப்படுத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவியதை அடுத்து அங்கு போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். இந்த மோதல் சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.