ஆதரவற்ற ஏழைக்கு வீடு கட்டிக்கொடுத்த பள்ளி மாணவர்கள்
பள்ளிப்பட்டு ஆற்றங்கரையில், ஆதரவற்ற ஏழைக்கு வீடு கட்டிக்கொடுத்த பள்ளி மாணவர்கள்.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஆற்றங்கரையில் உள்ள கசக்கரையில் வசித்து வருபவர் கிரி(வயது 45). கூலி தொழிலாளியான இவருக்கு திக்குவாய் பிரச்சினை இருப்பதால் அவருடைய மனைவி மற்றும் பிள்ளைகள் அவரை அனாதையாக தவிக்க விட்டு பிரிந்து சென்று விட்டனர்.
இதனால் கிரி, கடந்த சில ஆண்டுகளாக பள்ளிப்பட்டு ஆற்றங்கரையில் மண் சுவரில் தென்னங்கீற்று வேய்ந்த கூரை அமைத்து தனியாக வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் ஓலை குடிசை மீது மரக்கிளை இடிந்து விழுந்ததில் வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்தது. அந்த நேரம் கிரி வெளியே சென்று இருந்ததால் உயிர் பிழைத்தார். வீட்டை சீரமைக்க யாரும் உதவாததால் அதே வீட்டில் ஓரமாக படுத்து தூங்கினார்.
பள்ளிப்பட்டு பகுதியில் தனியார் பள்ளிகளில் படிக்கும் 10–ம் வகுப்பு, பிளஸ்–1 மற்றும் பிளஸ்–2 மாணவர்கள், இவரது பரிதாப நிலையை பார்த்து அவருக்கு உதவ முடிவு செய்தனர். அதன்படி ஆங்கில புத்தாண்டுக்கு பட்டாசு, கேக் உள்ளிட்டவைகளை வாங்க நினைத்த பணத்தை கொண்டு அவருக்கு வீடு கட்டினர்.
சிமெண்டு கற்களால் சுவர் எழுப்பி, அதன்மேல் சிமெண்டு ஓட்டால் மேற்கூரை அமைத்து, கதவும் போடப்பட்டது. ஆங்கில புத்தாண்டான நேற்று அந்த வீட்டின் சாவியை கிரியிடம் வழங்கிய மாணவர்கள், அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், மண் அடுப்பு, வாளி உள்பட சமையலுக்கு தேவையான பொருட்களையும் கிரியிடம் வழங்கி புத்தாண்டை புதுமையாக கொண்டாடினர்.