வரலாறு படைத்த மாவீரன்!


வரலாறு படைத்த மாவீரன்!
x
தினத்தந்தி 2 Jan 2018 10:13 AM IST (Updated: 2 Jan 2018 10:13 AM IST)
t-max-icont-min-icon

மதுரை பாண்டிய மன்னர் மரபைச் சேர்ந்த ஜெகவீரபாண்டியன், தெற்குச் சீமையில் அழகிய வீரபாண்டியபுரம் எனும் நகரில் இருந்து அரசோச்சி வந்தார்.

- வைகோ

நாளை (ஜனவரி3) வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள்

மதுரை பாண்டிய மன்னர் மரபைச் சேர்ந்த ஜெகவீரபாண்டியன், தெற்குச் சீமையில் அழகிய வீரபாண்டியபுரம் எனும் நகரில் இருந்து அரசோச்சி வந்தார். பிற குறுநில மன்னர்கள் அவர் மேல் போர் தொடுத்து வந்த போது, சாலிபுரத்திலே வாழ்ந்து வந்த போர்த்திறனில் வலிமை மிக்க கட்டபொம்மு என்பவர், மன்னருக்குப் பக்க பலமாகப் போரிட்டுப் பகைவரைப் புறம் காணச் செய்தார். அவரைத் தன் புதல்வரைப் போல் பாராட்டி அரவணைத்த மன்னருக்குப் பிள்ளைகள் இல்லாததால், கட்டபொம்முவையே ஆட்சியில் அமர்த்திவிட்டு மடிந்தார்.

அந்த ஆதி கட்டபொம்மு, சாலிபுரம் காட்டில் வேட்டையாடச் சென்றபோது, விரட்டி வந்த வேட்டை நாய்களை முயல் சீறி எதிர்த்ததைக் கண்டார். அங்கேயே கோட்டை கட்டி, தன் பாட்டன் பெயராகிய ‘பாஞ்சாலன்’ என்பதை முன்னிறுத்தி, ‘பாஞ்சாலங்குறிச்சி’ எனப் பெயர் சூட்டினார். அது கி.பி. 1101 என்று வரையறுத்து, அவருக்குப் பின் 46 கொடி வழிகளை ஆதாரங்களோடு தந்து, 47 ஆவது அரசனாக முடி சூடியவன்தான் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ என்று, வரலாற்று ஆசிரியர் ஜெகவீரபாண்டியனார் குறிப்பிடுகின்றார்.

வீரபாண்டிய கட்டபொம்மன்

திக்குவிசய ஜெகவீர கட்டபொம்முவுக்கும், சண்முகக் கனி எனும் ஆறுமுகத்தம்மாளுக்கும், 1760 ஆம் ஆண்டு, ஜனவரி 3 ஆம் நாள், கொல்லம் ஆண்டு 935 மார்கழி இருபதாம் நாளில் பிறந்த வீரபாண்டிய கட்டபொம்மன், கொல்லம் ஆண்டு, 965 தை மாதம் இருபதாம் தேதி, கி.பி. 1790 ஆம் ஆண்டு, அரச மகுடம் சூடினார். அவரது ஆயுதச் சாலையில், வாள்கள், வேல்கள், வல்லயங்கள், வில்லுகள், கவண்கள், வளைதடிகள் என 26 ஆயிரம் படைக்கலன்கள் இருந்தன. பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த 16 ஆயிரம் படை வீரர்கள் அவரிடம் இருந்தனர். ஐந்து அரபுக் குதிரைகளைப் பயன்படுத்தினார். அவரது போர்த்திறத்தை நாட்டுப்புறப் பாடல்கள் விவரிக்கின்றன.

நெல்லைச் சீமையில் நெற்கட்டான்செவலை ஆண்டு வந்த மன்னர் பூலித்தேவர், 1751-ல் படையெடுத்து வந்த கம்மந்தான் கான் சாகிப்பையும், ஆங்கிலப் படைகளையும் தோற்கடித்து சீர்மிகு புகழ் படைத்தார்.

ஆங்கிலேயர்களிடம் வாங்கிய கடன்கள் குவிந்து, திருப்பிச் செலுத்த முடியாததால், ஆர்க்காட்டு நவாப், தனக்குக் கீழ் இருந்த பாளையக்காரர்களிடம் வரி வசூலித்துக் கொள்ளலாம் என்று, 1792 இல் கிழக்கு இந்தியக் கம்பெனிக்கு ஒப்பந்தம் எழுதிக் கொடுத்தார். ஆனால், கட்டபொம்மன் வரி கொடுக்கவில்லை. 1797 இன் தொடக்கத்தில், கம்பெனியில் சார்பில் ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக்கு வந்து, ‘மற்ற பாளையக்காரர்கள் அனைவரும் கப்பம் கட்டி விட்டனர்; ஆறு ஆண்டுகளாக நீங்கள் மட்டும் கட்டவில்லை; பெயருக்காக, 6000 பொன் கொடுத்தால் போதும் என்று கேட்டார்.

அதற்குக் கட்டபொம்மன், 47 தலைமுறைகளாக நாங்கள் இந்த நாட்டை ஆண்டு வருகின்றோம். யாருக்கும் வரி தந்தது இல்லை என்றார்.

ஜாக்சன் துரையுடன் சந்திப்பு

ஆங்கிலேயர்கள் ஆத்திரம் அடைந்தனர். தெற்குச் சீமைக்குத் தலைமை அதிகாரியாக வந்த, டபிள்யு.சி. ஜாக்சன், 1798 ஆகஸ்ட் 18-ல் கடிதம் எழுதி ‘கட்டபொம்மன் திருநெல்வேலிக்கு வந்து தன்னைச் சந்திக்க வேண்டும்’ என்று தகவல் அனுப்பினார். ஆகஸ்ட் 24-ஆம் தேதி, தம்பி ஊமைத்துரை, தானாபதி பிள்ளை, வெள்ளையத்தேவன், சுந்தரலிங்கம் உள்ளிட்ட 4000 படை வீரர்களோடு நெல்லைக்குச் சென்றபோது, ஜாக்சன் குற்றாலத்திற்குப் போய்விட்டார். அங்கிருந்து அவர் அனுப்பிய தகவலின்படி, சொக்கம்பட்டி, திருவில்லிபுத்தூர், பேரையூர், பாம்புலி, அலங்காநல்லூர், கமுதி சென்று கடைசியாக செப்டம்பர் 9-ஆம் தேதி இரவில் கட்டபொம்மன் இராமநாதபுரம் போய்ச் சேர்ந்தார்.

செப்டம்பர் 10 ஆம் நாள் காலையில், ‘அரண்மனை வாயிலிலேயே மற்றவர்களை நிறுத்திவிட்டு, கட்டபொம்மன் தனியாக வர வேண்டும்’ என்ற கட்டளையை ஏற்றுக்கொண்டு, தனியாகச் சென்று, மாடியில் இருந்த ஜாக்சன் துரையைச் சந்தித்தார்.

‘ஏன் வரி கொடுக்கவில்லை?’ என்று மிரட்டும் தொனியில் கேட்டார் ஜாக்சன். ‘உறுதியாகச் சொல்லுகிறேன்; வரி செலுத்தும் வழக்கம் அன்றும் இல்லை, இன்றும் இல்லை, இனி என்றைக்கும் இல்லை’ என்றார் கட்டபொம்மன். ‘உம்மைக் கைது செய்கிறேன்’ என்று ஜாக்சன் ஆணையிட்டபோது, மோதல் ஏற்பட்டது. உப தளபதி கிளார்க், துப்பாக்கியால் சுட்டார்; அவரைக் கட்டபொம்மன் கட்டாரியால் குத்திக் கொன்றுவிட்டுத் தப்பினார். தானாபதிப் பிள்ளை மட்டும் பிடிபட்டார். திருச்சி அதிகாரிகள் முன்னிலையில் விசாரணை நடந்தது. நடந்த விவரங்களைத் தானாபதி பிள்ளை கூறினார் ‘ஜாக்சன் மீதுதான் தவறு’ என்று முடிவு செய்த அதிகாரிகள், தானாபதி பிள்ளையை விடுவித்து அனுப்பினர். ஜாக்சனின் பதவியைப் பறித்தனர்.

கோட்டை மீது தாக்குதல்

1799 ஜனவரி 12-ல், திருநெல்வேலி கலெக்டராக லூசிங்டன் பதவி ஏற்றார். ஆங்கிலேயர்கள் திருவைகுண்டம் களஞ்சியங்களில் சேகரித்து வைத்து இருந்த நெல்லை, தானாபதி சிவசுப்பிரமணிய பிள்ளை கொள்ளை அடித்தார். தலைமைக் காவலர் பாண்டியத்தேவரைக் கொன்று விட்டனர். பெர்கெட் துரை பாஞ்சாலங்குறிச்சிக்கு வந்து, ‘700 கோட்டை நெல் கொள்ளை போனது. அதன் விலை ரூ. 3300 ஆகும்; தானாதிப் பிள்ளையை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று கேட்டார். ‘நெல்லை அள்ளி வந்தது தவறுதான்; அதற்காக அபராதம் 700 சேர்த்து 4000 தருகிறேன்’ என்ற கட்டபொம்மன், தானாபதிப் பிள்ளையை ஒப்படைக்க மறுத்து விட்டார்.

அதனால், ஜான் பானர்மேன் தலைமையில், 1799 செப்டம்பர் 5-ஆம் தேதி காலையில் ஆங்கிலப் படைகள் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைத் தாக்கின. தளபதி இராபர்ட் டக்ளசை ஊமைத்துரை குத்திக் கொன்றார். மேஜர் காலின்சைக் குத்திக் கொன்ற வெள்ளையத் தேவன் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியானார். எதிரிகளின் ஆயுதக் குவியலை அழிப்பதற்கு, சுந்தரலிங்கம் உயிரைக் கொடுத்தார்.

ஊமைத்துரை

திருச்சிக்குச் சென்று ஆங்கிலேய மேலதிகாரிகளிடம் நிலைமையைத் தெரிவிக்கலாம் என்று முடிவு எடுத்து, கட்டபொம்மனும், ஊமைத்துரையும், தானாதிப் பிள்ளையும் நள்ளிரவில் கோட்டையை விட்டு வெளியேறினர். ஆங்கிலப் படைகள் விரட்டி வந்தன. தானாதிப் பிள்ளை மட்டும் பிடிபட்டார். 1799 செப்டம்பர் 13-ஆம் தேதி நாகலாபுரத்தில் வேப்பமரத்தில் தூக்கில் இட்டனர். அவரது தலையைப் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு முன்னால் ஈட்டியில் சொருகி வைத்தனர்.

புதுக்கோட்டை மன்னரின் ஆதரவைப் பெற்று, திருச்சிக்குப் போக முடிவு செய்து, காளாப்பூர் காட்டுக்குள் சென்றார் கட்டபொம்மன். ஆனால், ஆங்கிலேயர்களுக்குக் கட்டுப்பட்டு, கட்டபொம்மனையும், ஊமைத்துரை, முத்தையா, குமாரசாமி, முத்துக்குமாரசாமி, வீரணன் ஆகியோரையும் கைது செய்ய உதவினார் புதுக்கோட்டை மன்னர். அவர்களைக் கால் நடையாகவே கொண்டு வந்து அக்டோபர் 5-ஆம் தேதி கயத்தாற்றில் ஒரு சத்திரத்தில் அடைத்து வைத்தனர்.

விசாரணை நாடகம்

அக்டோபர் 16-ஆம் நாள் நீதிபதியைப் போல் பானர்மேன் அமர்ந்து கொண்டு விசாரணையைத் தொடங்கினார். ராபர்ட் ட்யூரிங், ஜார்ஜ் ஹுயெஸ், மேஜர் பெர்கெட், கர்னல் பிரெளன் ஆகிய நான்கு பேரும் பானர்மேனுக்கு இருபக்கத்திலும் அமர்ந்து இருந்தனர்.

முதல் குற்றச்சாட்டு: கிஸ்தி கொடுக்கவில்லை.

கட்டபொம்மன்: கிஸ்தி கொடுப்பது எங்கள் வழக்கம் இல்லை.

இரண்டாவது குற்றச்சாட்டு: கலெக்டர் லூசிங்டன் அழைத்தும்கூட நீங்கள் போய்ப் பார்க்கவில்லை. அவரை மதிக்கவில்லை.

கட்டபொம்மன்: கும்பினி அதிகாரிகள் என்னைப் பார்க்க வந்தபோது, மரியாதையாக நடத்தி இருக்கின்றேன்; அன்போடு உபசரித்து இருக்கின்றேன். ஆனால், ஜில்லா கலெக்டரைச் சந்திக்க வந்து காத்துக் கிடப்பதற்கு நான் ஒன்றும் வேலைக்காரன் அல்ல.

மூன்றாவது குற்றச்சாட்டு : தானாபதி சிவசுப்பிரமணிய பிள்ளையை எங்களிடம் ஒப்படைக்கவில்லை.

கட்டபொம்மன்: நெற்களஞ்சியத்தைக் கொள்ளை அடித்தது தவறுதான். அபராதத் தொகை தருவதாகச் சொன்னேன். அடைக்கலமாக என்னிடம் வந்தவரை எதிரிகளிடம் ஒப்படைப்பது, கட்டபொம்மனுக்குச் சரிப்பட்டு வராது.

நான்காவது குற்றச்சாட்டு: சிவகிரி பாளையத்திற்கு உள்ளே போய்க் கலகம் செய்தீர்.

கட்டபொம்மன்: அங்கே ஏற்பட்ட கலகத்தை அடக்க வேண்டும் என்று பாளையக்காரர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டதால், நான் அங்கே போனேன். ஐந்தாவது குற்றச்சாட்டு: கும்பினி இராணுவ அதிகாரிகள் பலர் கொல்லப்பட்டார்கள். அதற்கு நீர்தான் காரணம்.

சிரித்துக் கொண்டே கட்டபொம்மன் சொல்கிறார். பாஞ்சாலங்குறிச்சியின் மீது நீங்கள்தான் போர் தொடுத்தீர்கள். தற்காப்புக்காகத்தான் நாங்கள் எதிர்தாக்குதல் நடத்தினோம். திருச்சியில் உள்ள மேல் அதிகாரிகளுக்கு எடுத்துச் சொல்லலாம் என்று கருதிச் சென்றேன். ஆனால், மக்களைக் கைவிட்டுவிட்டு ஓடிப் போய்விட்டான் கட்டபொம்மன் என்று வதந்திகளைப் பரப்பி என்னை அவமானப்படுத்தினீர்கள். இருதரப்பாக மோதிக் கொண்டோம். ஆனால், போரைத் தொடுத்தவனே நீதிபதியாக விசாரணை செய்கின்ற விசித்திரத்தைப் பார்க்கின்றேன். உங்களுக்கு எது விருப்பமோ, அதைச் செய்து கொள்ளுங்கள்’ என்றார்.

என்ன துணிச்சல்! எவ்வளவு கூர்மையான வாதங்கள்!

தூக்குத்தண்டனை

கடைசியாக, உமக்குத் தூக்குத் தண்டனை விதித்து இருக்கிறேன் என்று அறிவித்தான் பானர்மேன்.

அஞ்சாத நெஞ்சுரத்துடன், பாளையக்காரர்களை ஏளனப் பார்வை பார்த்தவாறே, தூக்கு மரத்தை நோக்கி நடந்த பாஞ்சைச் சிங்கம், தூக்குக் கயிறைக் கழுத்திலே மாட்டிக்கொண்டு ஏணியை எட்டி உதைத்தார். திரண்டு இருந்த மக்கள் கதறி அழுதனர். மாவீரனின் உடல் இரண்டு மணி நேரம் அங்கேயே தூக்கில் தொங்கியது. காட்டுச் சுள்ளிகளையும், மரங்களையும் வைத்து வீரத்திருமகனின் உடலைக் கிடத்தினர். ஊமைத்துரை கொள்ளி வைத்தார்.

1799 அக்டோபர் 17-ஆம் நாள், தன்னுடைய நாட்குறிப்பில் பானர்மேன் எழுதி இருப்பது, கட்டபொம்மனின் மரணத்துக்கு அஞ்சா நெஞ்சத் துணிவைப் படம்பிடித்துக் காட்டுகிறது.

‘விசாரணையின்போது, பாளையக்காரர் கட்டபொம்மு நடந்துகொண்ட விதம் அதிசயிக்கத்தக்கது. எதற்கும் தளராமல், கலங்காமல் தீரமான அகந்தையோடு உறுதியாய் நிமிர்ந்தே இருந்தார். தூக்கு மரத்தை நோக்கி நடந்தபோது, இரு புறங்களிலும் மக்களைப் பார்த்தவாறு, பாளையக்காரர்களை இகழ்ந்து நோக்கி, மிகுந்த துணிவான தைரியத்தோடு கம்பீரமாய்ச் சென்றார். கோட்டையை விட்டு வெளியேறாமல், அங்கேயே நின்று உரிமையைப் பாதுகாத்து எதிரிகளை எதிர்த்துப் போராடி மாண்டு போயிருந்தால் மிக நன்றாய் இருந்திருக்கும் என்று கூறி உயிர் நீத்தார்’ என, பானர்மேன் எழுதி உள்ளார்.

கட்டபொம்மன் சிலை

கட்டபொம்மன் நாடகத்தைத் தமிழகத்தில் 100 இடங்களில் நடத்தியதோடு, பி.ஆர். பந்துலுவின் பத்மினி பிக்சர்ஸ் தயாரித்த, வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில், தமிழக மக்கள் நெஞ்சில், கட்டபொம்மனின் வீரகாவியத்தை வரைந்து, ஆசிய ஆப்பிரிக்கத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகர் விருதைப் பெற்று, கயத்தாற்றில் கட்டபொம்மன் சிலையை நிறுவி, 16.7.1970 அன்று, பெருந்தலைவர் காமராசர் தலைமையில், நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்களைக் கொண்டு திறந்து வைத்துப் பெருமை சேர்த்தவர், உலகிலேயே ஈடு இணையற்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆவார்.

எந்த மண்ணில் அக்கோட்டையை ஆங்கிலேயர்கள் இடித்துத் தள்ளினார்களோ, அதே இடத்தில் கட்டபொம்மன் கோட்டையை மீண்டும் கட்டி எழுப்பி, 1974 ஆகஸ்டு 18-ஆம் தேதி டாக்டர் நாவலர் தலைமையில், சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யும், தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் முன்னிலை வகிக்கத் திறந்து வைத்தார் அன்றைய முதல் அமைச்சர் டாக்டர் கலைஞர்.

1999-ல் அன்றைய பிரதமர் பொறுப்பில் அஞ்சல் துறையும் இருந்தபொழுது, எனது விண்ணப்ப மடலிலேயே கையொப்பம் பெற்று, வீரபாண்டிய கட்டபொம்மன் அஞ்சல் தலையை மத்திய அரசு தயாரித்து, அந்த ஆண்டு அக்டோபர் 16 கட்டபொம்மனின் 200 ஆவது நினைவுநாளில் வான்புகழ் வள்ளுவர் கோட்டத்தில், அன்றைய முதல் அமைச்சர் டாக்டர் கலைஞர் வெளியிட, நடிகர் திலகம் சிவாஜிகணேசன்முன்னிலையில் நான் பெற்றுக்கொண்டேன்.

வீரபாண்டிய கட்டபொம்மன் புகழ் என்றைக்கும் நிலைத்து நிற்கும்!

Next Story