ஓய்வு பெற்ற சப்–இன்ஸ்பெக்டர் வீட்டில் தங்க நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு


ஓய்வு பெற்ற சப்–இன்ஸ்பெக்டர் வீட்டில் தங்க நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு
x
தினத்தந்தி 3 Jan 2018 3:45 AM IST (Updated: 2 Jan 2018 10:53 PM IST)
t-max-icont-min-icon

கொல்லங்கோடு அருகே ஓய்வு பெற்ற சப்–இன்ஸ்பெக்டர் வீட்டில் தங்க நகை, வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

கொல்லங்கோடு,

கொல்லங்கோடு அருகே உள்ள சூரியகோடு சாத்தன்கோடை சேர்ந்தவர் பிரசன்னகுமார் (வயது 69). ஓய்வு பெற்ற போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர். இவர் தனது மனைவியுடன் கடந்த வாரம் சென்னையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றிருந்தார்.

நேற்று காலை பிரசன்னகுமார் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்ற போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும், பீரோவும் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டு இருந்த 5 பவுன் தங்க நகை மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் திருடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து பிரசன்ன குமார் கொல்லங்கோடு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டது.

பிரசன்னகுமார் வெளியூர் சென்றதை நோட்டமிட்டு கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். எனவே இந்த திருட்டு சம்பவத்தில் உள்ளூர் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஓய்வு பெற்ற போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு நடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story