நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம்


நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 3 Jan 2018 4:30 AM IST (Updated: 2 Jan 2018 10:53 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க கோரி நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

நாகர்கோவில்,

‘ஒகி‘ புயலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அனைவருக்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், கடலில் மீனவர்களுடன் படகுகளில் சென்ற வட இந்திய தொழிலாளர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும், புயல் பாதிப்புகளால் பாதிக்கப்பட்டு கடன் சுமையால் தற்கொலை மற்றும் மாரடைப்பால் உயிரிழந்த விவசாயிகளுக்கும் ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும்.

கடலில் காணாமல் போன மீனவர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க 7 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்ற விதியை தளர்த்தி ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற புயலால் பாதிப்படைந்த குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

போராட்டத்துக்கு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் நூர்முகமது, குமரி மாவட்ட செயலாளர் முருகேசன், முன்னாள் எம்.பி. பெல்லார்மின், முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செல்லசுவாமி, மாதவன், அண்ணாதுரை, உஷா, சேகர், கண்ணன், தங்கமோகன், அந்தோணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பேசினார்.

காத்திருப்பு போராட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள், விவசாய தொழிலாளர்கள், விவசாயிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதையொட்டி கலெக்டர் அலுவலக பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

போராட்ட முடிவில் கட்சி நிர்வாகிகள் கலெக்டரிடம் சென்று கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தனர். போராட்டத்தில் பங்கேற்றவர்களும் தனித்தனியாக கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தியும், நிவாரணம் வழங்கக்கோரியும் மனு கொடுத்தனர்.


Next Story