ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 34 வீரர்கள் காயம்


ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 34 வீரர்கள் காயம்
x
தினத்தந்தி 3 Jan 2018 4:30 AM IST (Updated: 3 Jan 2018 12:37 AM IST)
t-max-icont-min-icon

தச்சங்குறிச்சியில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 34 வீரர்கள் காயமடைந்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா தச்சங்குறிச்சி கிராமத்தில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கிராம மக்கள் ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்து மாவட்ட கலெக்டர் கணேசுக்கு கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையின் அடிப்படையில் அங்கு ஆய்வு செய்து கலெக்டர் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கினார். இதையடுத்து நேற்று தச்சங்குறிச்சி கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடந்தது. ஜல்லிக்கட்டை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் முறைப்படி அனுமதி பெற்று நடத்தப்படும் முதல் ஜல்லிக்கட்டு என்பதால் மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.

இந்த ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 750 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். சில காளைகள் மாடுபிடி வீரர்கள் கையில் சிக்காமல் சீறிப்பாய்ந்து சென்றன. இதில் காளைகள் முட்டியதில் 34 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர். இவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த புதுநகர் வட்டார சுகாதார மையம், கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். கடைசி நேரத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடுக்கப்பட்டதால் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசு எதுவும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story