மாவட்டம் முழுவதும் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் வேலைநிறுத்தம்


மாவட்டம் முழுவதும் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 3 Jan 2018 4:30 AM IST (Updated: 3 Jan 2018 12:42 AM IST)
t-max-icont-min-icon

தேசிய மருத்துவ ஆணைய சட்ட மசோதாவை எதிர்த்து நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி நாமக்கல்லில் ஆர்ப்பாட்டமும் நடந்தது.

நாமக்கல்,

மத்திய அரசு புதிதாக கொண்டு வர உள்ள தேசிய மருத்துவ ஆணைய சட்ட மசோதாவை எதிர்த்து நேற்று நாடு முழுவதும் டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டத்திலும் நேற்று காலையில் 500-க்கும் மேற்பட்ட தனியார் டாக்டர்கள் கிளனிக்குகளை மூடி, வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக அரசு ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் 300-க்கும் மேற்பட்ட டாக்டர்களும் கருப்பு பேட்ஜ் அணிந்து ஒரு மணி நேரம் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையொட்டி நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மருத்துவ சங்கத்தின் நாமக்கல் கிளை தலைவர் டாக்டர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். இதில் சங்க செயலாளர் வெங்கடேஷ், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்க தலைவர் ரங்கநாதன், அரசு டாக்டர்கள் சங்கத் தலைவர் அருள், அரசு மருத்துவ அலுவலர் சங்கத் தலைவர் ரங்கசாமி உள்பட 100-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டு, தேசிய மருத்துவ ஆணையத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

இதற்கிடையே நேற்று பிற்பகலுக்கு மேல் நாடு தழுவிய அளவில் நடந்த இந்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால், நாமக்கல்லிலும் டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டு பணிக்கு திரும்பினர்.

இதேபோன்று திருச்செங்கோட்டில் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் திருச்செங்கோடு கிளை தலைவர் டாக்டர் அன்பழகன், செயலாளர் பிரசன்ன பாலாஜி உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்.

இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் நேற்று ஒரு மணி நேரம் தங்களது பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தால் நோயாளிகள் சிரமப்பட்டனர். டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக திருச்செங்கோடு பகுதியில் தனியார் ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டு இருந்தன. இதனால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.

இதேபோல் ராசிபுரத்தில் உள்ள ஆஸ்பத்திரிகள் மற்றும் கிளினிக் டாக்டர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூர், பிள்ளாநல்லூர், அத்தனூர், மங்களபுரம் உள்பட ராசிபுரம் பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிகளிலும் டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தால் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் சிரமப்பட்டனர். ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் ஒரு மணி நேரம் வேலை நிறுத்தம் செய்தனர். மேலும் அவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

Next Story