பயிர் இழப்பீட்டு தொகை வழங்குவதில் பாரபட்சம் கலெக்டரிடம் கிராம மக்கள் புகார்
மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் பயிர் இழப்பீட்டு தொகை வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக கிராமமக்கள், கலெக்டரிடம் புகார் செய்தனர்.
விருதுநகர்,
மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள ஆனைக்குளம், பாப்பான்குளம், சுள்ளங்குடி, எம்.ரெட்டியபட்டி, வீரசோழன், ஒட்டன்குளம், மேலப்பருத்தியூர், விலக்குசேரி, கே.ஆலங்குளம், சம்மனேந்தல், சிம்பூர், நத்தக்குளம் ஆகிய கிராம மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் கலெக்டர் சிவஞாத்திடம் கூறியதாவது:–
நாங்கள் 2016–17–ம் ஆண்டுக்குரிய பயிர் இழப்பீட்டு தொகை கேட்டு செம்பொன்நெருஞ்சி, பட்டமங்களம், வீரசோழன் உள்ளிட்டகிராம தொடக்க கூட்டுறவு சங்கங்களில் மனு செய்தோம். அதில் சிலருக்கு பட்டியலில் பெயர் இடம்பெறவில்லை என்று இழப்பீட்டு தொகை வழங்க இயலாது என கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மறுக்கும் நிலை உள்ளது. ஏற்கனவே மழை இல்லாமல் பயிர்கள் கருகிய நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இழப்பீட்டு தொகைக்கு விண்ணப்பித்தும் எங்களுக்கு தொகை கிடைக்காததால் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி இருக்கிறோம்.
அதிலும் சிலருக்கு ஏக்கருக்கு ரூ.17,500 இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நரிக்குடி யூனியனில் பல கிராமங்களில் ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. வீரசோழன் பகுதியில் ஏக்கருக்கு ரூ.2 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பயிர் இழப்பீட்டு தொகை வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவது ஏன் என்று தெரியவில்லை. எனவே இப்பிரச்சினையில் தாங்கள் தலையிட்டு காப்பீட்டு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ.17,500 இழப்பீட்டு தொகை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வறுமையில் வாடும் எங்களுக்கு தொகை தாமதம் இல்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கலெக்டரிடம் தெரிவித்தனர்.