பெரியபாளையம் கிராம வார்டுகளை குமரப்பேட்டை ஒன்றியத்தில் இணைக்க எதிர்ப்பு


பெரியபாளையம் கிராம வார்டுகளை குமரப்பேட்டை ஒன்றியத்தில் இணைக்க எதிர்ப்பு
x
தினத்தந்தி 3 Jan 2018 4:30 AM IST (Updated: 3 Jan 2018 1:17 AM IST)
t-max-icont-min-icon

எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் கிராம வார்டுகளை குமரப்பேட்டை ஒன்றியத்தில் இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தை வாக்காளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரியபாளையம்,

2011–ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் வார்டுகள் மறுவரையறை நடந்தபோது திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ள பெரியபாளையம் ஊராட்சியின் 8 வார்டுகளை குமரப்பேட்டை ஒன்றியத்தில் இணைத்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கானவர்கள் ஆட்சேபனை மனுவை அதிகாரிகளிடம் வழங்கியுள்ளனர்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது என்று சிலர் கூறியதாக தெரிகிறது. இதனால் அப்பகுதி வாக்காளர்கள் ஏராளமானோர் பெரியபாளையத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இதுகுறித்து தங்களது கருத்தை எழுத்துபூர்வமாக வழங்க வந்தனர். ஆனால், அலுவலகத்தில் இருந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அலட்சியமாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அனைவரும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன கோ‌ஷம் எழுப்பினர். கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனே வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட அவர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன் பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் குடும்ப அட்டையை ஒப்படைத்தல், உண்ணாவிரதம், மறியல் போராட்டம் என்று தொடர்ந்து போராட்டம் நடத்தப்போவதாக இப்பகுதி வாக்காளர்கள் தெரிவித்தனர்.


Next Story