அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை


அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை
x
தினத்தந்தி 3 Jan 2018 4:45 AM IST (Updated: 3 Jan 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வரும் பொருட்கள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கிறார்கள். இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாக அலுவலகத்திற்கு கடிதம் ஒன்று வந்துள்ளது. அந்த கடிதத்தில், காஞ்சீபுரம் ரெயில் நிலையத்தில் இந்து சிற்பங்களை தார் பூசி அழித்தது போல புத்தாண்டன்று கோவிலுக்கு வரும் பக்தர்கள் மீதும், பவுர்ணமி கிரிவலம் செல்லும் பக்தர்கள் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசுவோம் என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் மற்றும் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், கடிதம் அனுப்பியவரை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடந்த 30-ந் தேதி திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்திற்கு புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

அதன்பேரில் நேற்று முன் தினம் புத்தாண்டு அன்று கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி தலைமையில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரவாளிப்பிரியா மேற்பார்வையில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அவர்கள் கொண்டு வரும் பை உள்ளிட்ட பொருட்கள் தீவிர சோதனை செய்யப்பட்டு கோவிலுக்குள் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டது. கிரிவலப் பாதையிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் கோவிலுக்குள் பக்தர்கள் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். அதுமட்டுமின்றி பக்தர்கள் கொண்டு வந்த பொருட்கள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்ட பிறகே கோவிலுக்குள் எடுத்து செல்லப்பட்டது.

இந்த கடிதம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story