கள்ளக்குறிச்சி அருகே பயங்கரம்: அரிவாளால் வெட்டி வக்கீல் படுகொலை 6 பேர் கைது


கள்ளக்குறிச்சி அருகே பயங்கரம்: அரிவாளால் வெட்டி வக்கீல் படுகொலை 6 பேர் கைது
x
தினத்தந்தி 3 Jan 2018 4:30 AM IST (Updated: 3 Jan 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் அரிவாளால் வெட்டி வக்கீல் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். 2 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

கள்ளக்குறிச்சி,

 கள்ளக்குறிச்சி அருகே உள்ள தென்கீரனூரை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன்(வயது 40). வக்கீல். இவருடைய மனைவி வெண்ணிலா. இவர்களுக்கு சூர்யா, ஸ்ரீராம் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் சூர்யா கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பும், அதே பள்ளிக்கூடத்தில் ஸ்ரீராம் 5-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு ஜெயப்பிரகாஷ் நாராயணன் தனது மோட்டார் சைக்கிளில் கள்ளக்குறிச்சிக்கு வந்தார். அங்கு சில பொருட்களை வாங்கிக்கொண்டு அதே மோட்டார் சைக்கிளில் 11.30 மணிக்கு தென்கீரனூர் நோக்கி அவர் புறப்பட்டார்.

கள்ளக்குறிச்சி அண்ணாநகருக்கும், தென்கீரனூருக்கும் இடையே சென்றபோது, அந்த வழியாக வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென ஜெயப்பிரகாஷ் நாராயணனை வழிமறித்தது. அந்த பகுதி இருளாக இருந்ததால் ஜெயப்பிரகாஷ் நாராயணன், செய்வதறியாமல் திகைத்துப்போனார்.

உடனே அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அதற்குள் அந்த கும்பல், ஜெயப்பிரகாஷ் நாராயணனை சுற்றி வளைத்தது. பின்னர் அந்த கும்பல், அரிவாளால் ஜெயப்பிரகாஷ் நாராயணனை சரமாரியாக வெட்டியது. இதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்து, துடிதுடித்து இறந்தார்.

அவர் இறந்ததை உறுதி செய்ததும், அந்த கும்பல் அங்கிருந்து மின்னல் வேகத்தில் வாகனங்களில் தப்பிச்சென்றது. இது குறித்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கோமதி, இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஜெயப்பிரகாஷ் நாராயணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஜெயப்பிரகாஷ் நாராயணனை அரிவாளால் வெட்டிக்கொன்ற கும்பல் யார்?, எதற்காக வெட்டினார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தென்கீரனூரை சேர்ந்த எல்.ஐ.சி. முகவரான கிருஷ்ணன்(40) என்பவருக்கும், ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்கும் உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கிருஷ்ணனுக்கும், அதே பகுதியை சேர்ந்த சீனுவாசன் என்பவருக்கும் நிலப்பிரச்சினை ஏற்பட்டது. இதில் சீனுவாசனுக்கு ஆதரவாக ஜெயப்பிரகாஷ் நாராயணன் செயல்பட்டு வந்துள்ளார். இதனால் ஜெயப்பிரகாஷ் நாராயணன் மீது கிருஷ்ணனுக்கு ஆத்திரம் ஏற்பட்டு, அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினார். அதன்படி கள்ளக்குறிச்சியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த ஜெயப்பிரகாஷ் நாராயணனை, கிருஷ்ணன், தனது அண்ணன் வேலு(45), ஏமப்பேரை சேர்ந்த கருணாநிதி மகன் சுரேஷ், மாயக்கிருஷ்ணன் மகன் கார்த்திகேயன், தென்கீரனூரை சேர்ந்த முத்துசாமி மகன் முருகன், கோட்டைமேடை சேர்ந்த மணி மகன் செந்தில் ஆகியோருடன் சேர்ந்து அரிவாளால் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே ஜெயப்பிரகாஷ் நாராயணனின் உறவினர்கள் நேற்று காலை தென்கீரனூரில் உள்ள கிருஷ்ணன் வீட்டுக்கு சென்றனர். அப்போது அங்கு யாரும் இல்லாததால் அவருடைய வீடு மற்றும் வேலுவின் வீட்டுக்கு தீ வைத்தனர். மேலும் அண்ணாநகரில் உள்ள கிருஷ்ணனின் அலுவலகத்துக்கும் சென்று அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். பின்னர் அவர்கள் தென்கீரனூர்-மலைக்கோட்டாலம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஜெயப்பிரகாஷ் நாராயணனை கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

இதுபற்றி அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உங்களது கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையேற்று அவரது உறவினர்கள் கலைந்து சென்றனர்.

இதற்கிடையே இதுபற்றி அறிந்த விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினார். இந்தநிலையில் வக்கீல் ஜெயப்பிரகாஷ் நாராயணன் உடல் வைக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அவரது உறவினர்கள் மற்றும் வக்கீல்கள் கூடினர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகி இருப்பதால், பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story