புனேயில் போர் நினைவுதின கொண்டாட்டத்தில் வாலிபர் பலி: மும்பையில் வன்முறை வெடித்தது
புனேயில் போர்நினைவு தின கொண்டாட்டத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் வாலிபர் பலியானார்.
மும்பை,
புனேயில் போர்நினைவு தின கொண்டாட்டத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் வாலிபர் பலியானார். இந்த சம்பவத்தை கண்டித்து மும்பையில் நடந்த போராட்டங்களில் திடீரென வன்முறை வெடித்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
போர் நினைவு தினம்இந்தியா ஆங்கிலேயர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த காலகட்டத்தில், 1818–ம் ஆண்டு ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி குழுவுக்கும், மராட்டியத்தை சேர்ந்த பேஷ்வா படையினருக்கும் இடையே போர் நடைபெற்றது. இதில், ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி குழு, பேஷ்வா படையை தோற்கடித்ததாக வரலாறு குறிப்பிடுகிறது.
குறிப்பாக, ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி குழுவின் போர் படையில், அங்கம் வகித்த நம் நாட்டை சேர்ந்த ஒரு பிரிவினரின் அயராத முயற்சியால், பேஷ்வா படை தோற்றதாக நம்பப்படுகிறது. இந்த போர் வரலாற்றில் ‘பீமா– கோரேகாவ் போர்’ என்று அறியப்படுகிறது. மேலும், கிழக்கிந்திய கம்பெனி குழுவின் இந்த வெற்றியை ஒவ்வொரு ஆண்டும் மராட்டியத்தில் குறிப்பிட்ட அந்த சமூகத்தினர் கொண்டாடி வருகின்றனர்.
வன்முறைஅதன்படி, நேற்று முன்தினம் பீமா– கோரேகாவ் போரின் 200–வது ஆண்டு நினைவுதினத்தையொட்டி புனேயில் உள்ள போர் நினைவுச்சின்னம் நோக்கி லட்சக்கணக்கானோர் திரண்டு வந்தனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, அவர்களை கண்டித்து கோஷம் எழுப்பியபடி அங்கு வந்தனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு, பயங்கர மோதல் உண்டானது.
திடீரென வன்முறை தொற்றிக்கொண்டது. இந்த கலவரத்தில் போலீஸ் வேன் உள்பட 15 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பல வீடுகளும் சேதப்படுத்தப்பட்டன. இதனால், புனே நகரம் முழுவதும் போர்க்களம் போல் காட்சியளித்தது. இந்த வன்முறை சம்பவத்தில் ராகுல் என்ற 28 வயது வாலிபர் பலியானார்.
போலீசார் தடியடி நடத்தி கலவரக்காரர்களை கலைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து பதற்றம் நிலவியதால் ஏராளமான மாநில ரிசர்வ் படை போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
ரெயில் மறியல் போராட்டம்இந்தநிலையில், மோதலில் வாலிபர் பலியான சம்பவத்தை கண்டித்து, நேற்று மாநிலம் முழுவதும் குறிப்பிட்ட சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மும்பையில் செம்பூர், கோவண்டி பகுதியில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் துறைமுக வழித்தடத்தில் ரெயில்சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதன் காரணமாக பயணிகள் கடும் அவதி அடைந்தனர். பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கி நடந்து சென்றனர். எனினும் ரெயில் மறியல் போராட்டத்தின் போது சி.எஸ்.எம்.டி.– குர்லா, பன்வெல்– வாஷி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டதாக மத்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.
செம்பூரில் 144 தடைஇதேபோல் மும்பையில் உள்ள காட்கோபர் ரமாபாய் காலனி, செம்பூர், பவாய், கோவண்டி, முல்லுண்டு உள்ளிட்ட பல இடங்களிலும் புனேயில் வாலிபர் பலியான சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இந்த போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெஸ்ட் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்கினார்கள்.
இதில் அவற்றின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இந்த திடீர் தாக்குதலை சற்றும் எதிர்பாராத பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். பயத்தில் அலறி அடித்து கொண்டு கீழே இறங்கி ஓடினார்கள். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் நிலைமையை கட்டிற்குள் கொண்டுவர முடியாமல் திணறினர். இதன் காரணமாக செம்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறைஇதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடைகள் அனைத்தையும் மூடுமாறு உரிமையாளர்களை மிரட்டினர். வலுக்கட்டாயமாக சில கடைகளின் ஷட்டரை இழுத்து மூடவும் செய்தார்கள். பதற்றமான சூழல் ஏற்பட்டதால் முல்லுண்டு, செம்பூர், காட்கோபர், வடலா உள்ளிட்ட பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன.
செம்பூரில் சில பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. மழலையர் பள்ளியில் விடப்பட்ட குழந்தைகளை அவர்களது பெற்றோர்கள் வந்து உடனடியாக வீடுகளுக்கு அழைத்து செல்லும்படி அறிவுறுத்தப்பட்டனர். பதற்றத்துடன் ஓடிவந்த பெற்றோர் தங்கள் குழந்தைகளை அவசர, அவசரமாக வீடுகளுக்கு அழைத்து சென்றனர்.
அரசு பஸ்கள் சேதம்இதேபோல ஆர்ப்பாட்டக்காரர்கள் கிழக்கு விரைவு நெடுஞ்சாலை செம்பூர் நாக்கா, காட்கோபர் காமராஜ் நகர் உள்ளிட்ட இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த ரோட்டில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். போக்குவரத்து நெரிசலில் ஒரு சில ஆம்புலன்சுகளும் சிக்கின. இதனால் அதில் இருந்த நோயாளிகள் கடும் சிரமம் அடைந்தனர்.
புனேயில் ஏற்பட்ட இந்த மோதல் மும்பை மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பரவியது. நேற்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 134 அரசு பஸ்கள் போராட்டக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால், மராட்டியத்தின் பிரதான நகரங்களில் போலீசார் குவிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.