சரக்கு பெட்டக மாற்று முனையத்தால் கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் கலெக்டரிடம் மனு


சரக்கு பெட்டக மாற்று முனையத்தால் கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 4 Jan 2018 4:15 AM IST (Updated: 3 Jan 2018 11:14 PM IST)
t-max-icont-min-icon

கோவளம்– மணக்குடி இடையே அமைய உள்ள சரக்கு பெட்டக மாற்று முனையத்தால்(துறைமுகம்) கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று துறைமுக எதிர்ப்பு இயக்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

நாகர்கோவில்,

கன்னியாகுமரி சர்வதேச பெட்டக மாற்று முனைய (துறைமுகம்) எதிர்ப்பு இயக்க தலைவர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி தலைமையில், நிர்வாகிகள் ஸ்ரீதரன், நாகமணி, தியாகராஜன் மற்றும் கடலோர அமைதி மற்றும் வளர்ச்சிக்குழு இயக்குனர் அருட்பணியாளர் ஸ்டீபன் மற்றும் பலர் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர்.

 அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

கடற்கரை கிராமங்களான கோவளம் மற்றும் கீழமணக்குடி இடையே கோவில்விளை, கிண்ணிக்கண்ணன்விளை, முகிலன் குடியிருப்பு, கோம்பவிளை, இலந்தையடிவிளை, நரியன்விளை என்ற ஊர்கள் அமைந்துள்ளது. இந்த ஊர்களில் இந்துக்கள் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள்.

குமரி மாவட்டத்தில் அமைய இருப்பதாக கூறப்படும் பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனையம் இந்த கிராமங்களுக்கு தெற்கே அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த திட்டத்தால் இந்த கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

எனவே இந்த ஊர்களில் வசிக்கும் மக்களின் விருப்பப்படி கன்னியாகுமரி சர்வதேச பெட்டக மாற்று முனைய எதிர்ப்புக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. பாதிப்புக்குள்ளாகும் அனைத்து கிராம மக்களின் விருப்பப்படி எதிர்ப்பு இயக்க கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இந்த மனுவுடன் இணைத்துள்ளோம். அதில் இந்த துறைமுக திட்டத்தால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தெளிவாக கூறியுள்ளோம்.

எனவே எங்களது தீர்மானத்தை படித்து பார்த்து எங்கள் நிலைமையை உணர்ந்து, இந்த திட்டம் எங்கள் பகுதியில் வராமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story