விருதுநகரில் 30 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத அரசு கட்டிடம் இடிந்து விழும் அபாயம்
விருதுநகரின் மையப்பகுதியில் 30 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத அரசு கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் சொக்கநாதசாமி கோவில் அருகில் உள்ள பெருமாள் கோவில் தெருவில் முற்றிலுமாக சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் அரசு கட்டிடம் உள்ளது. இது 30 ஆண்டுகளுக்கு முன்னர் வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடமாக செயல்பாட்டில் இருந்து வந்துள்ளது. அங்கிருந்து வருவாய் ஆய்வாளர் அலுவலகம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு விட்டதால் இந்த இடம் பூட்டியே கிடந்துள்ளது. காலப்போக்கில் கட்டிடத்தில் இருந்த கதவு, ஜன்னல் போன்ற மரச்சாமான்கள் அங்கிருந்து இடித்து எடுக்கப்பட்டு விட்டது. தற்போது இந்த கட்டிடம் மட்டும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
மாவட்ட நிர்வாகம் சமீபத்தில் மாவட்டம் முழுவதும் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடங்களை கண்டறிந்து 52 கட்டிடங்களை இடித்து அகற்றியதாக தெரிவித்துள்ளது. ஆனால் மாவட்ட தலைநகரான விருதுநகரில் நகரின் மையப்பகுதியில் இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த கட்டிடத்தை கண்டுகொள்ளாதது ஏன் என்று தெரியவில்லை.
இந்த கட்டிடத்தின் அருகில் குடியிருப்பு பகுதிகள் உள்ளதால் பள்ளிக்குழந்தைகள் அந்த வழியாகத்தான் சென்று வருகின்றனர். கோவிலுக்கு செல்லும் பக்தர்களும் இந்த வழியே தான் சென்று வருகின்றனர். இந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தால் அந்த வழியாக செல்வோருக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் விபரீதம் ஏற்படுவதற்கு முன்னர் இந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு அந்த இடத்தில் மக்களுக்கு பயன்படக்கூடிய வகையில் வேறு கட்டிடங்களை கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
வாய்ப்பு இருந்தால் விருதுநகர் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களை மீண்டும் இந்த இடத்திலேயே செயல்படுவதற்கு ஏற்பாடு செய்யலாம்.