ஆண்டிப்பட்டி அருகே பஸ்களில் மாணவர்கள் ஆபத்து பயணம்
ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டியில் கல்லூரி மாணவர்கள் பஸ்களில் ஆபத்து பயணம் மேற்கொள்கின்றனர். கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி,
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைந்து உள்ளது. இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஆண்டிப்பட்டியில் இருந்தும், தேனியில் இருந்தும் தேக்கம்பட்டி வழியாக சென்று வரும் பஸ்களில் இந்த மாணவ, மாணவிகள் பயணம் செய்து வருகின்றனர்.
இந்த வழியாக காலை மற்றும் மாலை நேரங்களில் போதிய பஸ் வசதி இல்லை. கல்லூரிக்கு மாணவ, மாணவிகள் வரும்போதும், கல்லூரி முடிந்து திரும்பிச் செல்லும்போதும் போதிய பஸ் வசதி இன்றி சிரமப்படுகின்றனர். காலை, மாலை நேரங்களில் மாணவர்களின் நலன் கருதி கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்றும், காலையில் தேக்கம்பட்டிக்கும், மாலையில் தேக்கம்பட்டியில் இருந்தும் தேனி, ஆண்டிப்பட்டிக்கு பஸ்கள் இயக்க வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், போதிய பஸ்கள் இயக்கப்படாததால் மாலை நேரங்களில் மாணவ, மாணவிகள் ஆபத்தான நிலையில் பஸ்களில் பயணம் செய்கின்றனர். படிக்கட்டுகளில் தொற்றிக் கொண்டும், கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்துக் கொண்டும் வீடு திரும்ப வேண்டிய நிலைமை உள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் பலர் க.விலக்கு வரை நடந்து வந்து அங்கிருந்து தங்கள் ஊருக்கு பஸ் ஏறிச் செல்கின்றனர்.
மாணவ–மாணவிகள் விபத்தில் சிக்கினால் அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகும் என்பதோடு, அவர்களின் குடும்பத்தினரும் நம்பிக்கையும் பாழாகிவிடும். எனவே மாணவ, மாணவிகளின் நலன் கருதி இங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்
அதேபோல், இந்த வழியாக மணல் மற்றும் மண் ஏற்றிக் கொண்டு லாரிகள் அசுர வேகத்தில் சென்று வருகின்றன. எனவே, மண், மணல் ஏற்றிச் செல்லும் லாரிகளின் வேகத்தை கட்டுப்படுத்தவும், அனுமதியின்றி மண் ஏற்றிச் செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் மாணவ, மாணவிகளின் கோரிக்கையாக உள்ளது.