பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 4 Jan 2018 3:15 AM IST (Updated: 4 Jan 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

விழுப்புரம்,

அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் கொடுக்கும் மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் அந்த மனு மீது எடுக்கப்பட்ட நிலை குறித்து தெரியப்படுத்த வேண்டும், மாதாந்திர உதவித்தொகை விவரங்களை அந்தந்த தாலுகா அலுவலகத்தில் பெயர் பலகையில் ஒட்ட வேண்டும், கடனுதவியை முறையாக வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தனர். இருப்பினும் இவர்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

இந்த நிலையில் ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளிகள் நேற்று காலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். இவர்கள் அனைவரும் அங்குள்ள அலுவலக வளாகத்தில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனே மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலசுந்தரம் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இந்த கோரிக்கைகள் குறித்து கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இதனை ஏற்ற மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் கலெக்டர் சுப்பிரமணியனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவை பெற்ற கலெக்டர், விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.


Next Story