உளுந்தூர்பேட்டையில் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
உளுந்தூர்பேட்டையில் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகே செம்பியமாதேவி கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகே உள்ள இடத்தில் தனி நபர் ஒருவர் வீடு கட்ட முயற்சி செய்ததாக தெரிகிறது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதுதொடர்பாக இருதரப்பினரிடையே தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் இருதரப்பினருடையேயான சமாதான கூட்டம் நேற்று உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகத்தில் நடைபெறுவதாக இருந்தது.
இதற்கிடையே நேற்று காலை சப்–கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்களுடனான கூட்டம் இருந்ததால் சமாதான கூட்டத்தை மாலைக்கு ஒத்திவைத்தனர். இதையறிந்த கிராம மக்கள் நேற்று மதியம் தாலுகா அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். தொடர்ந்து சமாதான கூட்டத்தை உடனடியாக நடத்தக்கோரி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த தாசில்தார் பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து சமாதான கூட்டத்தை நடத்தினார். அப்போது சர்ச்சைக்குரிய இடம் கோவிலுக்கு தான் சொந்தம் என இருதரப்பினர் சார்பிலும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டது.
இதையடுத்து ஆவணங்களை சரிபார்த்து, நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.