தஞ்சை சமுத்திரம் ஏரியில் ஆகாயத்தாமரை அகற்றப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு


தஞ்சை சமுத்திரம் ஏரியில் ஆகாயத்தாமரை அகற்றப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 4 Jan 2018 4:15 AM IST (Updated: 4 Jan 2018 1:56 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை சமுத்திரம் ஏரியில் ஆகாயத்தாமரை அகற்றப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை-நாகை சாலையில் ஞானம்நகர் பகுதியில் சமுத்திரம் ஏரி உள்ளது. அந்த காலத்தில் 800 ஏக்கர் பரப்பளவில் காணப்பட்ட இந்த ஏரி இன்றைக்கு 242 ஏக்கர் பரப்பளவாக குறைந்துவிட்டது. இந்த ஏரி நிரம்பினால் ஆண்டுதோறும் அந்த பகுதியில் சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும். மேலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் தட்டுப்பாடு இல்லாதநிலை இருந்து வந்தது. ஆனால் இந்த ஏரி முறையாக பராமரிக்கப் படாததால் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது.

ஆகாயத்தாமரைகள் படர்ந்து ஏரியில் தண்ணீர் இருப்பதே தெரியாத அளவுக்கு காணப்படுகின்றன. இந்த ஆகாயத்தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆங்காங்கே ஏரியை ஆக்கிரமித்து வருவதால் ஏரியின் பரப்பளவு இன்னும் குறைய வாய்ப்பு உள்ளது. நீர்நிலைகளில் பிளாஸ்டிக் பொருட்கள், கோழி, மாட்டு இறைச்சி கழிவுகளை கொட்டக்கூடாது என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் சமுத்தரம் ஏரியில் கோழி, மாட்டு இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. மேலும் கரையோரம் கழிவு பொருட்களை கொட்டி தீ வைக்கப்படுகிறது.

ஏரியை ஆழப்படுத்தி படகு போக்குவரத்து வசதியை ஏற்படுத்துவதற்காக 2012-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் அந்த பணி அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த ஏரியை பராமரிக்கவில்லை என்றால் ஏரி இருந்ததற்கான அடையாளமே தெரியாமல் போய்விடும்.

விவசாயிகள் கருத்து

இது குறித்து விவசாயிகள் சிலர் கூறும்போது, சமுத்திரம் ஏரி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் அதன் பரப்பளவு குறைந்து கொண்டே வருகிறது. ஏரிக்கரையில் சிறுவர்களுக்கான பூங்கா அமைத்து, 1 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபாதை அமைப்பதுடன் படகுசவாரி வசதியை ஏற்படுத்துவதற்காக ரூ.1½ கோடியில் திட்டம் தீட்டப்பட்டு பூமிபூஜையும் 2012-ம் ஆண்டு போடப்பட்டது. தொடக்கத்தில் வேகமாக தொடங்கிய இந்த பணி பின்னர் கிடப்பில் போடப்பட்டது. ஏரிகளில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என்றனர். 

Next Story