நலவாழ்வு முகாமில் பங்கேற்க கோவில் யானைகள் தேக்கம்பட்டிக்கு பயணம்


நலவாழ்வு முகாமில் பங்கேற்க கோவில் யானைகள் தேக்கம்பட்டிக்கு பயணம்
x
தினத்தந்தி 4 Jan 2018 4:15 AM IST (Updated: 4 Jan 2018 2:01 AM IST)
t-max-icont-min-icon

நலவாழ்வு முகாமில் பங்கேற்க கோவில் யானைகள் தஞ்சையில் பூஜை செய்து தேக்கம்பட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தஞ்சாவூர்,

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களை சேர்ந்த யானைகளின் நலனுக்காக ஆண்டு தோறும் நலவாழ்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு நலவாழ்வு முகாம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்த முகாம் 48 நாட்கள் நடக்கின்றன. முகாமில் தினமும் காலை, மாலை யானைகளுக்கு நடைப்பயிற்சி அளிக்கப்படும். பசுந்தீவனம், சத்துணவு மற்றும் இயற்கை மருந்துகளும் வழங்கப்படும்.

இந்த முகாமில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கோவில் யானைகள் கொண்டு வரப்படுகிறது. அதன்படி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவிலில் உள்ள செங்கமலம் என்ற யானையும், திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் உள்ள தர்மாம்பாள் யானையும் நலவாழ்வு முகாமில் பங்கேற்கிறது.

லாரிகளில் பயணம்

இந்த 2 யானைகளும் குளிப்பாட்டி அந்தந்த கோவில்கள் முன்பு சிறப்பு பூஜை செய்யப்பட்டு லாரிகளில் ஏற்றப்பட்டன. யானைகளை பக்தர்கள், கோவில் ஊழியர்கள் வழியனுப்பி வைத்தனர். மன்னார்குடியில் இருந்து புறப்பட்ட செங்கமலமும், திருவையாறில் இருந்து புறப்பட்ட தர்மாம்பாளும் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் அருகே உள்ள தான்தோன்றி மாரியம்மன் கோவிலுக்கு நேற்றுகாலை கொண்டு வரப்பட்டன. அங்கு பூஜை செய்யப்பட்டு, யானைகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டன.

பின்னர் யானைகள் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர்கள் சிவராம்குமார், கிருஷ்ணன், ஆய்வாளர்கள் கருணாநிதி, மனோகரன், செயல் அலுவலர்கள் சுகுமார், திருநாவுக்கரசு, டாக்டர்கள் செந்தில்குமார், சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Next Story