கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் சித்தராமையா தொடங்கி வைத்தார்
கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை சித்தராமையா தொடங்கி வைத்தார்.
பெங்களூரு,
கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை சித்தராமையா தொடங்கி வைத்தார்.
இலவச மடிக்கணினிகள்கர்நாடகத்தில், கல்லூரிகளில் முதலாமாண்டு படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் விழா பெங்களூரு விதான சவுதாவில் நடைபெற்றது. இதில் முதல்–மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு மடிக்கணினிகளை வழங்கி பேசியதாவது:–
கர்நாடகத்தில் டிகிரி கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி பெங்களூரு நகர மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள மாணவ–மாணவிகளுக்கு இன்று(அதாவது நேற்று) மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை நான் தொடங்கி வைத்துள்ளேன். இதே போல் மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் பொறுப்பு மந்திரிகள் மூலம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும்.
வருமான உச்சவரம்புமாநிலம் மொத்தம் 1½ லட்சம் மாணவ–மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படும். இந்த திட்டத்தில் பயன் பெற வருமான உச்சவரம்பு ரூ.2½ லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பணக்காரர்கள் மடிக்கணினியை எளிதாக வாங்குவார்கள். ஏழைகளுக்கு அந்த சக்தி இருப்பது இல்லை. ஏழை குழந்தைகள் தரமான கல்வியை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மடிக்கணினிகளை அரசு வழங்குகிறது.
மாணவர்கள் இதை பயன்படுத்தி அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும். திறமை என்பது யாருடைய சொத்தும் இல்லை. பிறப்பில் இருந்தே எல்லாம் வருவது இல்லை. சூழ்நிலைக்கு ஏற்ப திறமை வெளிப்படுகிறது. இந்த மின்னணு உலகத்தில் ஏழை குழந்தைகள் நல்ல தரமான கல்வியை பெற வேண்டும். மாணவர்கள் இந்த சமுதாயத்தின் சொத்துகள்.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.
நியாயமான விலையில்...உயர்கல்வித்துறை மந்திரி பசவராஜ் ஹொரட்டி பேசுகையில், “தரமான மடிக்கணினிகள் நியாயமான விலையில் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. ஒரு மடிக்கணினி ரூ.14 ஆயிரத்து 500 விலையில் வாங்கப்பட்டுள்ளது. இதன் விலை சந்தையில் ரூ.22 ஆயிரம் ஆகும்“ என்றார். இதில் மந்திரிகள் கே.ஜே.ஜார்ஜ், ஆஞ்சனேயா, மேயர் சம்பத்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.