வரைவு மறு வரையறை பட்டியலை முழுவதுமாக திரும்ப பெற வேண்டும் கலெக்டரிடம் மனு


வரைவு மறு வரையறை பட்டியலை முழுவதுமாக திரும்ப பெற வேண்டும் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 4 Jan 2018 4:30 AM IST (Updated: 4 Jan 2018 2:23 AM IST)
t-max-icont-min-icon

வரைவு மறு வரையறை பட்டியலை முழுவதுமாக திரும்ப பெற வேண்டும் கலெக்டரிடம், சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மனு

சேலம்,

சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமையில் துணை செயலாளர்கள் சுந்தரம், சம்பத், நெசவாளர் அணி அமைப்பாளர் ஏ.ஏ.ஆறுமுகம், மகளிர் அணி நிர்வாகி நிர்மலா உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

பின்னர் அங்கு மாவட்ட கலெக்டர் ரோகிணியை சந்தித்து மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தற்போது ஆளும் கட்சிக்கு சாதகமான சூழல் இல்லை. எனவே, உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்கும் நோக்கத்தோடு வார்டு மறு வரையறை குழு அமைக்கப்பட்டு 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி உள்ளாட்சி மன்றங்களுக்கான வார்டுகள் மறுவரையறை செய்யப்படும் என்ற தனது முந்தைய நிலையை திடீரென மாற்றிக்கொண்டு தமிழக அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து வார்டு மறுவரையறை குழு பொதுமக்களிடமும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடமும் கருத்து கேட்டு மறுவரையறை செய்யாமல், தன்னிச்சையாக கடந்த மாதம் 29-ந் தேதி வரைவுப்பட்டியல் வெளியிடப்பட்டது. அது குறித்த ஆட்சேபனைகளும், கருத்துகளும் தெரிவிக்க வார்டு மறுவரையறை குறித்த விவரங்களையோ, வரைபடங்களையோ அளிக்க அதிகாரிகள் முன்வரவில்லை. தற்போது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையரிடமும், குழுவின் உறுப்பினர்களிடமும் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கொடுத்த மனுவின் அடிப்படையில் நாளை(வெள்ளிக்கிழமை) வரை ஆட்சேபனைகள் கொடுக்க காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. சில ஆட்சேபனைகளை தெரிவிக்கிறது. அதாவது, தற்போது தன்னிச்சையாக வெளியிட்ட வரைவு வார்டு மறுவரையறை பட்டியலை முழுமையாக திரும்ப பெற வேண்டும். சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி மன்றங்கள் குறித்த வார்டு மறுவரையறை எங்களது கருத்தினை கேட்டபின்புதான் ஏற்படுத்தப்பட வேண்டும். உள்ளாட்சி மன்றங்கள் வாரியாக கருத்து கேட்பு கூட்டம் உரிய முன் அறிவிப்புடன் தகுந்த கால அவகாசத்துடன் நடத்தப்பட வேண்டும். ஆட்சேபனை குறித்து குழு மட்டுமே பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் எவ்வித முடிவும் எடுக்க அதிகாரம் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story