மராட்டியத்தில் வன்முறை போராட்டக்காரர்கள் அமைதி காக்குமாறு அரசியல் கட்சிகள் வேண்டுகோள்
மராட்டியத்தில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இதனால், போராட்டக்காரர்கள் அமைதி காக்குமாறு அரசியல் கட்சிகள் வேண்டுகோள் விடுத்தன.
மும்பை,
மராட்டியத்தில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இதனால், போராட்டக்காரர்கள் அமைதி காக்குமாறு அரசியல் கட்சிகள் வேண்டுகோள் விடுத்தன.
வன்முறைபுனேயில் இரு தரப்பினர் இடையே கடந்த திங்கட்கிழமை திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த பிரச்சினை மாநிலம் முழுவதும் விஸ்வரூபம் எடுத்து, வன்முறையாக மாறியது. அரசு பஸ்கள் தாக்கப்பட்டன. சாலையெங்கும் ஒருவருக்கொருவர் கல் வீசி தாக்கி கொண்டனர். இதனால், கடந்த இரண்டு நாட்களாக மாநிலமே ஸ்தம்பித்தது.
இந்த நிலையில், போராட்டக்காரர்கள் வன்முறையை கைவிட்டு அமைதி காக்குமாறு அரசியல் கட்சிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
சிவசேனா, காங்கிரஸ்சிவசேனா செய்தித்தொடர்பாளர் நீலம் கோரே கூறுகையில், ‘‘புனே மாவட்டம் பீமா– கோரேகாவ் மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் நடைபெற்ற சம்பவங்கள் துரதிருஷ்டவசமானது. சமுதாயத்தில் பிளவு ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. இதனை நாம் முறியடிக்க வேண்டும்’’ என்றார்.
மராட்டியத்தில் இயல்பு நிலையை கொண்டு வருவதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநில தலைவர் அசோக் சவான் கூறினார். மேலும், விசாரணை நடத்தினால் மட்டும் போதாது என்று கூறிய அவர், குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சுனில் தத்காரே, ‘‘மாநிலத்தில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் காப்பதே இந்த வேளையில் முக்கியம்’’ என்று கூறினார்.