மராட்டியத்தில் முழு அடைப்பு எதிரொலி சினிமா படப்பிடிப்புகள், திரைப்பட விழாக்கள் ரத்து
மராட்டியம் முழுவதும் நேற்று முழு அடைப்பு நடைபெற்றது. இதனால், சினிமா படப்பிடிப்புகள், திரைப்பட விழாக்கள் ரத்து செய்யப்பட்டன.
மும்பை,
மராட்டியம் முழுவதும் நேற்று முழு அடைப்பு நடைபெற்றது. இதனால், சினிமா படப்பிடிப்புகள், திரைப்பட விழாக்கள் ரத்து செய்யப்பட்டன.
திரைப்பட விழாக்கள் ரத்துபுனே கலவரத்தை கண்டித்து நேற்று மராட்டியம் முழுவதும் ‘பந்த்’ நடைபெற்றது. இதனால், கடைகள் அடைக்கப்பட்டன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், ‘பந்த்’ காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.
மும்பையில், நடிகர் கார்த்திக் ஆரியன் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் ‘சோனு கே திது கி ஸ்வீட்டி’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா பிரபல நட்சத்திர ஓட்டலில் நடைபெறுவதாக இருந்தது. வன்முறை காரணமாக இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
பாதுகாப்பு முக்கியம்இதுபற்றி படத்தின் இயக்குனர் லூவ் ரஞ்சனிடம் கேட்டபோது, ‘‘எங்கள் நிகழ்ச்சி மிகவும் நேர்மையான ஒன்று. ஆனாலும், ஒவ்வொருவரது பாதுகாப்பும் எங்களுக்கு முக்கியம். ஆகையால், பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியை ரத்து செய்ய முடிவு செய்தோம்’’ என்றார்.
இதேபோல், அந்தேரி, ஜோகேஸ்வரியில் நடைபெற்ற பிரபல சீரியல் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டன. படப்பிடிப்பு அரங்கிற்கு வெளியே கல் வீச்சு சம்பவங்கள் அரங்கேறியதால், படப்பிடிப்பை நிறுத்தி வைத்ததாக சீரியல் இயக்குனர்கள் தெரிவித்தனர்.
இது மட்டுமின்றி, நேற்று நடைபெற இருந்த பல்வேறு திரைப்பட விளம்பர விழாக்களும் தள்ளிவைக்கப்பட்டன.