நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பஸ் ஊழியர்கள் ‘திடீர்’ வேலைநிறுத்தம் பஸ்கள் ஓடாததால் பயணிகள் அவதி
நெல்லை மாவட்டத்தில் பஸ் ஊழியர்கள் நேற்று இரவு ‘திடீர்‘ வேலைநிறுத்த போராட்டம் தொடங்கினர். பஸ்கள் ஓடாததால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் பஸ் ஊழியர்கள் நேற்று இரவு ‘திடீர்‘ வேலைநிறுத்த போராட்டம் தொடங்கினர். பஸ்கள் ஓடாததால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
வேலைநிறுத்தம்–பயணிகள் அவதிபோக்குவரத்து தொழிலாளர்களின் 13–வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை சென்னையில் நேற்று நடந்தது. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் அரசு பஸ் ஊழியர்கள் நேற்று இரவில் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். நெல்லை மற்றும் தூத்துக்குடி அரசு போக்குவரத்து அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்று இரவு வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது.
இதனால் வண்ணார்பேட்டை தாமிரபரணி பணிமனை, புறவழிச்சாலை பணிமனை, கே.டி.சி.நகர் பணிமனைகளுக்கு இரவு 8.30 மணிக்கு பிறகு பஸ்கள் வரத்தொடங்கின. நெல்லை சந்திப்பு மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கக்கூடிய டவுன் பஸ்களை டிரைவர்கள் இயக்காமல் டெப்போக்களுக்கு கொண்டு வந்து நிறுத்தினர்.
தென்காசி, ஆலங்குளம், பாபநாசம் உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்லக்கூடிய பஸ்களும் டெப்போக்களுக்கு வரத்தொடங்கின. இரவு 10 மணி நிலவரப்படி 20 சதவீத புறநகர் பஸ்கள் வந்து இருந்தன. இந்த வேலைநிறுத்தம் காரணமாக சந்திப்பு பஸ்நிலையம் மற்றும் புதிய பஸ்நிலையங்களில் போதிய பஸ்கள் இல்லாததால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
ஆர்ப்பாட்டம்இதற்கிடையில் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள புறவழிச்சாலை கிளை பணிமனை முன்பு டிரைவர்கள், கண்டக்டர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க பொதுச்செயலாளர் உலகநாதன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதுகுறித்து உலகநாதன் கூறுகையில், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளோம். ஏற்கனவே புறப்பட்டு சென்ற பஸ்கள், பயணிகளை பத்திரமாக இறக்கிவிட்டு டெப்போவுக்கு வந்துவிடும். நாளை(இன்று) அதிகாலை முதல் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் முழுவீச்சில் நடைபெறும் என்றார்.
ஆலோசனைஇந்த நிலையில் அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்க பேரவை போக்குவரத்து பிரிவு சார்பில் அதன் நிர்வாகிகள் நேற்று இரவு ஒவ்வொரு டெப்போவுக்கும் சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். பஸ்களை சீராக இயக்குவது தொடர்பாக அவர்கள் அதிகாரிகளுடன் ஆலோசித்தனர்.
தூத்துக்குடியில்...அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் போராட்டம் அறிவித்த உடனேயே வெளியூர்களில் இருந்து தூத்துக்குடியில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்களது அலுவலக பணிகளை உடனடியாக முடித்துக் கொண்டு தூத்துக்குடி பழைய, புதிய பஸ் நிலையங்களுக்கு விரைந்து வந்தனர். ஆனால் தூத்துக்குடியில் இருந்து நெல்லை, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ்கள், டவுன் பஸ்கள் நேற்று இரவு வழக்கம் போல் இயங்கின. தூத்துக்குடியில் இருந்து மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன.
அதே நேரத்தில் கோவில்பட்டியில் இருந்து நெல்லை, மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு இரவில் பஸ்கள் இயக்கப்படவில்லை. அந்த பஸ்கள் அனைத்தும் கோவில்பட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நிறுத்தப்பட்டன. வெளியூர்களில் இருந்து கோவில்பட்டி வழியாக சென்ற சில பஸ்களும், அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் பெரிதும் அவதி அடைந்தனர்.