வெளியூர் செல்லும் அரசு விரைவு பஸ்கள் ‘திடீர்’ நிறுத்தம்; பயணிகள் கடும் அவதி


வெளியூர் செல்லும் அரசு விரைவு பஸ்கள் ‘திடீர்’ நிறுத்தம்; பயணிகள் கடும் அவதி
x
தினத்தந்தி 5 Jan 2018 4:30 AM IST (Updated: 5 Jan 2018 1:14 AM IST)
t-max-icont-min-icon

சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர் மற்றும் வெளிமாநிலம் செல்லும் அரசு விரைவு பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். பணிமனை முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

சேலம்,

அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடந்தது. இதில் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததையொட்டி சேலம் மாவட்டத்தில் வெளியூர் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு இயங்கக்கூடிய பெரும்பாலான அரசு மற்றும் அரசு விரைவு பஸ்கள் நிறுத்தப்பட்டன.

சேலம் மணக்காடு அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படக்கூடிய 22 பஸ்களை டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் இயக்கவில்லை. இதனால், பணிமனையில் பஸ்கள் வெளியே எடுக்காமல் நிறுத்தப்பட்டன.

மேலும் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் இரவு 8 மணிக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு உடனடியாக, போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவேண்டும் என கோஷம் எழுப்பினர்.

போராட்டம் குறித்து சி.ஐ.டி.யு.தொழிற்சங்க மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே.தியாகராஜன் கூறியதாவது:-

இன்றைக்கு அரசு அறிவித்த ஊதியம் என்பது மிகப்பெரிய முரண்பாடாக உள்ளது. அரசு சம்பளத்தை பற்றி பேசாமல், அதன் முரண்பாடு பற்றி பேசாமல் நாங்கள் ரீபிள் கொடுத்தோம், துணி கொடுத்தோம்.. அதை கொடுத்தோம் என்பதெல்லாம் தொழிலாளர்களை ஏமாற்றும் செயல் ஆகும்.

ஆகவே, போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற 65 ஆயிரம் தொழிலாளர்கள் நிர்க்கதியாக நின்று கொண்டு இருக்கிறார்கள். உயர்நீதிமன்றம் உடனடியாக ரூ.204 கோடி பணத்தை வழங்க வேண்டும் என கூறியது. இன்றைக்கு வரவுக்கும், செலவுக்கும் உரிய தொகையை அமைச்சரே ஏற்றுக்கொண்டுள்ளார். முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதா சட்டமன்றத்தில் 10 ஆயிரம் பஸ்கள் கிராமப்புறங்களில் இயக்கப்படுவதால் அரசு நஷ்டம் என்று தெரிந்தே இயக்குகிறோம் என்று சொன்ன பதிவு உள்ளது. ஆகவே, நஷ்டத்தை அரசுதான் ஈடுகட்ட வேண்டும். ஆனால், அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு கிடைக்கவில்லை.

தொழிற்சங்கம் வேலைநிறுத்தம் என்று இதுவரை அறிவிக்கவில்லை. ஆனால், இப்போது தமிழ்நாடு முழுவதும் தொழிலாளர்களே தன்னிச்சையாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களது எதிர்ப்பை, ஆத்திரத்தை தெரிவிக்கும் வகையில் ஆங்காங்கே நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே, அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவேண்டும். தமிழகத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படவில்லை. திருச்சி, சென்னை போன்ற ஊர்களில் முழுமையாக பஸ்கள் இயக்கப்படவில்லை. சேலத்தில் 22 அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதுபோல அரசு பஸ்களும் முக்கிய ஊர்களுக்கு இயக்கப்படவில்லை. எனவே, அரசு பேச்சுவார்த்தை நடத்தி குறைந்த பட்ச ஊதியம் ரூ.19,500 வழங்க வேண்டும். அடுத்த கட்ட போராட்டம் குறித்து சென்னையில் கூட்டமைப்பு நிர்வாகிகள் முடிவெடுப்பார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வெளிமாநிலமான கர்நாடகம், ஆந்திரா, புதுச்சேரி மற்றும் சென்னை போன்ற வெளியூர்களுக்கு இயக்கப்படும் அரசு விரைவு பஸ்கள் இரவு 8 மணிக்கு மேல் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். ஏற்கனவே, பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் செய்வதறியாது திகைத்தனர். அவர்கள், அங்கிருந்த டிக்கெட் கவுண்ட்டர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

Next Story