கரிவலம்வந்தநல்லூர் அருகே துணிகரம் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க உதவி செய்வது போல் மோசடியில் ஈடுபட்ட வாலிபர்
ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க உதவி செய்வது போல் மோசடியில் ஈடுபட்ட வாலிபரை கையும், களவுமாக பிடித்து வியாபாரி போலீசில் ஒப்படைத்தார்.
நெல்லை,
ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க உதவி செய்வது போல் மோசடியில் ஈடுபட்ட வாலிபரை கையும், களவுமாக பிடித்து வியாபாரி போலீசில் ஒப்படைத்தார்.
கரிவலம்வந்தநல்லூர் அருகே நடந்த இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–
வியாபாரிநெல்லை மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள பனையூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வியாபாரி தங்கமலை (வயது 49). இவர் நேற்று முன்தினம் கரிவலம்வந்தநல்லூர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்றுள்ளார். அவருக்கு பணம் எடுக்க தெரியவில்லை. அங்கு நின்ற வாலிபர், தங்கமலைக்கு உதவி செய்வதாக கூறினார்.
உடனே தங்கமலை ஏ.டி.எம். கார்டை வாங்கிய வாலிபர், பணம் எடுக்கும் எந்திரத்தில் சொருகியது போன்ற சொருகி விட்டு கார்டை எடுத்து விட்டார். பின்னர் உங்களது ஏ.டி.எம். கார்டு செயல்படவில்லை என்று கூறி தன்னிடம் இருந்த இன்னொரு ஏ.டி.எம். கார்டை தங்கமலையிடம் கொடுத்தார். தங்கமலையும் அந்த கார்டை வாங்கி வைத்துக் கொண்டார்.
போலீசில் ஒப்படைப்புஉடனே அந்த வாலிபர் மீண்டும் ஏ.டி.எம். மையத்துக்குள் சென்று தன்னிடம் வைத்துக் கொண்ட தங்கமலை ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.7 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு ஏ.டி.எம். மையத்தை விட்டு வெளியே வந்தார். இதனை கவனித்துக் கொண்டிருந்த தங்கமலை அந்த வாலிபரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் உதவியுடன் மடக்கி பிடித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசில் ஒப்படைத்தார்.
போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியதில் அவர், விருதுநகர் மாவட்டம் முகவூர் பாலவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்த ஆனந்தகுமார் (23) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தகுமாரை கைது செய்தனர். ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க உதவி செய்வதாக கூறி வாலிபர் மோசடியில் ஈடுபட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
* மானூர் அருகே குறிச்சிகுளத்தை சேர்ந்த தொழிலாளி சேக்மைதீன் (32). இவர் மதுகுடித்து விட்டு தனது மனைவி முகமது பாத்துவிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் முகமது பாத்து கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். சேக் மைதீன், மனைவியிடம் சமாதானம் பேசி தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் அவர் வர மறுத்து விட்டதாக தெரிகிறது. இதில் மனம் உடைந்த சேக்மைதீன், தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ரேஷன்கடையில் பாமாயில் திருட்டு* பாவூர்சத்திரம்– தென்காசி ரோட்டில் கே.டி.சி. நகர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், மேலப்பாவூர் கீழக்காலனியைச் சேர்ந்த செல்வம் (29), தென்காசி கீழபாறையடி தெருவைச் சேர்ந்த முருகன் (32) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள், பாவூர்சத்திரம் அருகே மேலப்பாவூர் ஒத்தப்பனையடி சாஸ்தா கோவிலில் கடந்த 2–ந் தேதி பொருட்கள் மற்றும் உண்டியல் பணத்தை திருடிச் சென்றதும், கடந்த ஆகஸ்டு மாதம் திப்பணம்பட்டி ரேஷன் கடையின் பூட்டை உடைத்து 40 பாக்கெட் பாமாயில் திருடியதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து கோவிலில் திருடிய பொருட்கள், பாமாயில் பாக்கெட்டுகளை போலீசார் மீட்டனர். இது தொடர்பாக பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர்.
* குருவிகுளம் அருகே மேலஅழகுநாச்சியார்புரத்தை சேர்ந்த கணேஷ்குமார் (21) சிதம்பரபுரம் கண்மாயில் டிராக்டரில் மண் கடத்தியதாக குருவிகுளம் போலீசார் அவரை கைது செய்தனர். மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுதொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகனை போலீசார் தேடிவருகிறார்கள்.
அய்யப்ப பக்தர் பலி* சேரன்மாதேவி அருகே உள்ள சங்கன்திரடு பகுதியைச் சேர்ந்தவர்கள் ராமச்சந்திரன் (42), கணேசன் (25), பூதப்பாண்டியன். இவர்கள் 3 பேரும் சுத்தமல்லி தாமிரபரணி ஆற்றில் வேன், மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திக் கொண்டு இருந்தனர். அப்போது, அங்கு வந்த சுத்தமல்லி போலீசார் கணேசனை கைது செய்தனர். மற்ற 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் போலீசார் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
* வேலூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த பிச்சை மகன் சுரேஷ் (வயது 32). இவர் அந்த பகுதியைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்களுடன் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஒரு பஸ்சில் சென்றார். பின்னர் அங்கு இருந்து நெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியாக ஊருக்கு வந்து கொண்டு இருந்தனர். பஸ்சை பூபதி (38) ஓட்டினார். அச்சன்கோவில் அருகில் வந்த போது, பஸ் நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் இருந்த சுரேஷ் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் பஸ்சின் டிரைவர் பூபதி, சுரேஷின் மகன் ஜெயசீலன் (10) ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மேலும் விபத்தில் பலியான சுரேஷின் உடல் பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து அச்சன்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.