திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தினால் பெண்களின் கல்வி சதவீதம் அதிகரிப்பு


திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தினால் பெண்களின் கல்வி சதவீதம் அதிகரிப்பு
x
தினத்தந்தி 5 Jan 2018 4:30 AM IST (Updated: 5 Jan 2018 1:34 AM IST)
t-max-icont-min-icon

திருமண நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தினால் தமிழகத்தில் ஆண்களை விட பெண்களின் கல்வி கற்கும் சதவீதம் அதிகரித்துள்ளது என கலெக்டர் ரோகிணி பேசினார்.

மேட்டூர்,

மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா மேட்டூர் சின்ன பார்க் திடலில் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கினார். செம்மலை எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

விழாவில், திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கத்தை பயனாளிகளுக்கு கலெக்டர் ரோகிணி வழங்கினார்.

மொத்தம் 399 பயனாளிகளுக்கு 3,192 கிராம் தங்கமும், ரூ.1 கோடியே 47 லட்சம் மதிப்பில் திருமண நிதி உதவியும் வழங்கப்பட்டது.

விழாவில் கலெக்டர் ரோகிணி பேசியதாவது:-

திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தினால் தமிழகத்தில் ஆண்களை விட பெண்களின் கல்வி கற்கும் சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத்திட்டம், இலவச தையல் எந்திர திட்டம், அங்கன்வாடி மையங்களில் 5 வகை உணவுத் திட்டம், கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் 2011-ம் ஆண்டு முதல் இதுவரை 38 ஆயிரத்து 287 பயனாளிகளுக்கு 1 லட்சத்து 53 ஆயிரத்து 148 கிராம் தங்கமும், ரூ.134.86 கோடி மதிப்பிலான திருமண நிதி உதவியும் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் மேட்டூர் உதவி கலெக்டர் மேகநாதரெட்டி, மாவட்ட சமூகநல அலுவலர் பரிமளாதேவி, நகர கூட்டுறவு வங்கி தலைவர் சந்திரசேகர், கூட்டுறவு நிலவள வங்கி தலைவர் பாலசுப்ரமணி, வட்டார கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் ஜெயகுமார், தாசில்தார் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story