முதல்–மந்திரி சித்தராமையா குமாரசாமி–தேவேகவுடாவை விமர்சித்ததால் அரசு விழாவில் இருந்து வெளியேறிய ஜனதாதளம் எஸ் கட்சி தலைவர்கள்
முதல்–மந்திரி சித்தராமையா, குமாரசாமி– தேவேகவுடாவை விமர்சித்ததால் அரசு விழாவில் இருந்து ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர்கள் வெளியேறினர்.
ஹாசன்,
முதல்–மந்திரி சித்தராமையா, குமாரசாமி– தேவேகவுடாவை விமர்சித்ததால் அரசு விழாவில் இருந்து ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர்கள் வெளியேறினர். மேலும் அவர்கள் சித்தராமையாவுக்கு எதிராக போராட்டம் நடத்தியதுடன் கண்டன கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வளர்ச்சிப் பணிகள் தொடக்க விழாகர்நாடக சட்டசபைக்கு வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தலை எதிர்கொள்ள ஆளும் காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் தயாராகி வருகின்றனர். ஆளும் காங்கிரஸ் அரசு சார்பில் தொகுதி வாரியாக வளர்ச்சிப் பணிகள் தொடக்க விழா நடந்து வருகிறது. இந்த விழாவில் முதல்–மந்திரி சித்தராமையா கலந்துகொண்டு வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்து, பேசி வருகிறார். அப்போது அவர், எதிர்க்கட்சிகளான பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சிகளை கடுமையாக குற்றம்சாட்டி வருகிறார்.
இதற்கு அந்த இரு கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அரசு விழாவை காங்கிரஸ் கட்சி விழா போல் மாற்றி, எதிர்க்கட்சிகளை சித்தராமையா வசைபாடுவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த நிலையில் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் கோட்டை என வர்ணிக்கப்படும் ஹாசன் மாவட்டத்தில் உள்ள அரிசிகெரே, அரக்கல்கோடு ஆகிய பகுதிகளில் நடந்த வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடக்க விழாவில் முதல்–மந்திரி சித்தராமையா கலந்துகொண்டார். அவர் வழக்கம்போல் எதிர்க்கட்சிகளான பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர்களையும், அக்கட்சியையும் குற்றம்சாட்டி பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.
ஜனதாதளம்(எஸ்) தலைவர்கள் வெளியேறினர்அதேப் போல் பேளூர் பகுதியிலும் கர்நாடக அரசு சார்பில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தொடக்க விழா நேற்று மாலை நடந்தது. இதில் முதல்–மந்திரி சித்தராமையா கலந்துகொண்டு வளர்ச்சிப் பணிகளை தொடங்கிவைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர்களான தேவேகவுடா, குமாரசாமி ஆகியோரையும் சரமாரியாக குற்றம்சாட்டி பேசினார். அத்துடன் காங்கிரஸ் அரசின் சாதனைகளையும் விளக்கமாக எடுத்துரைத்தார். அந்த சமயத்தில் விழாவில் கலந்துகொண்ட ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த பேளூர் நகரசபை தலைவி பாரதி அருண்குமார், தாலுகா பஞ்சாயத்து தலைவர் சி.ஏ.ஹரீஷ், ஏ.பி.எம்.சி. தலைவர் விஷ்ணுகுமார், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஆகியோர் திடீரென்று எழுந்து வெளியேறினர்.
கண்டன கோஷம்– போராட்டம்அவர்கள் கூறுகையில், ‘முதல்–மந்திரி சித்தராமையா அரசு விழாவை பிரசார பொதுக்கூட்டம் போல் மாற்றி, எதிர்க்கட்சியினரை குற்றம்சாட்டி வருகிறார். இது சரியல்ல. வளர்ச்சிப் பணிகள் தொடக்க விழா என்பது, அரசு விழா. ஆனால் காங்கிரஸ் கட்சி கூட்டம் போல் அந்த விழாவை சித்தராமையா மாற்றிவிட்டார். பேளூரில் நடந்த வளர்ச்சிப் பணிகள் தொடக்க விழாவில் ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர்களை அவதூறாகவும், குற்றம்சாட்டியும் பேசினார். இதனால் விழாவில் இருந்து நாங்கள் வெளியேறினோம்‘ என்றனர்.
பின்னர் அவர்கள் விழா நடைபெறும் இடத்தில் இருந்து ஊர்வலமாக பசவேஸ்வரா சர்க்கிளுக்கு சென்று போராட்டம் நடத்தினர். அங்கு அவர்கள், முதல்–மந்திரி சித்தராமையாவுக்கு எதிராகவும், காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விழா முடியும் வரை இந்த போராட்டம் நீடித்தது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
அடுத்தகட்ட நடவடிக்கைஇதுகுறித்து சி.ஏ.ஹரீஷ் நிருபர்களிடம் கூறுகையில், ‘அரசு விழாவில் முதல்–மந்திரி சித்தராமையா ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர்களை குறைசொல்லி பேசுகிறார். இவ்வாறு பேசுவது சரியல்ல. அரசு விழாவில் எதிர்க்கட்சிகளை குற்றம்சாட்டுவதை கைவிட வேண்டும். அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு எடுப்போம்‘ என்றார்.