மும்பையில் தொடரும் சோகம் அடுக்குமாடி கட்டிட தீ விபத்தில் 4 பேர் பரிதாப சாவு

அந்தேரியில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மும்பை,
அந்தேரியில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தீ விபத்துமும்பை அந்தேரி கிழக்கு போரி காலனியில் மைமூன் மன்சில் என்ற 4 மாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் உள்ள வீடுகளில் வசித்து வருபவர்கள் நேற்று அதிகாலை அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர்.
இந்தநிலையில், அதிகாலை 1.45 மணியளவில் திடீரென அந்த கட்டிடத்தில் உள்ள ஒரு வீட்டில் தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென மற்ற மாடிகளில் உள்ள வீடுகளுக்கும் பரவி எரிந்தது.
தீயின் வெப்பம் காரணமாக வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் திடுக்கிட்டு எழுந்தனர். தீ கொழுந்துவிட்டு எரிந்ததை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த அவர்கள், பதறி அடித்துக்கொண்டு கீழே இறங்கினார்கள். தீப்பிடித்த வீட்டில் இருந்து பயங்கர அலறல் சத்தம்கேட்டது.
தீயை அணைக்க போராட்டம்தீ விபத்து பற்றி உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வாகனங்களில் விரைந்து வந்தனர். வீடுகளில் சிக்கி அபயக்குரல் எழுப்பி கொண்டிருந்த 17 பேரை தீயணைப்பு படையினர் துரிதமாக செயல்பட்டு மீட்டனர்.
மேலும் கட்டிடத்தில் எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டுக்குள் கொண்டு வர போராடினார்கள். ஆனால் தீயை உடனடியாக அணைக்க முடியவில்லை.
சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு படையினர் கட்டிடத்தில் உள்ள வீடுகளில் சென்று, யாராவது உள்ளே சிக்கியிருக்கிறார்களா? என தேடிப்பார்த்தனர்.
அப்போது ஒரு வீட்டின் படுக்கையறையில் ஒரு சிறுமியும், முதியவரும் பலத்த தீக்காயங்களுடன் பிணமாக கிடந்தனர். அவர்களின் உடல்கள் தீயில் கருகி போயிருந்தன.
4 பேர் சாவுஅந்த வீட்டின் குளியலறையில் பெண் மற்றும் ஒரு சிறுவனும் பிணமாக மீட்கப்பட்டனர். இருவரும் தீயில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் குளியலறைக்குள் சென்று, மூச்சு திணறி உயிரிழந்து போனது தெரியவந்தது.
பலியான ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல்களையும் தீயணைப்பு படையினர் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், பலியானவர்கள் பெயர் தஸ்மின் அப்பாஸ்(வயது43), அவரது மகள் சகினா அப்பாஸ் (14), மகன் மோயிஸ் அப்பாஸ்(10) மற்றும் தாவூத் அலி(80) என்பது தெரியவந்தது.
முன்னதாக தீ எரிந்து கொண்டிருந்த போது, தப்பிக்கும் முயற்சியில் வெளியே ஓடிவந்த 5 பேர் தீயில் சிக்கி காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காரணம் என்ன?தீ விபத்து தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தஸ்மின் அப்பாசின் வீட்டில் இருந்த ஏ.சி. பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது கண்டறியப்பட்டு உள்ளது. அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த தஸ்மின் அப்பாஸ் உள்பட யாருக்கும் ஏ.சி. பெட்டி தீப்பிடித்து எரிவது தெரியவில்லை. அப்போது, தீயின் வெப்பத்தால் ஏ.சி. பெட்டியின் ஒரு பகுதி உடைந்து எரிந்தபடியே படுக்கையில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமி சகினா அப்பாஸ் மீது விழுந்து அமுக்கி இருக்கிறது.
இதில், படுக்கையிலும் தீப்பிடித்தது. இதனால் உடல் வெந்து அவள் வேதனை தாங்க முடியாமல் அலறி இருக்கிறாள்.
இதை பார்த்து பதறிப்போன அவளது தாத்தா தாவூத் அலி அவளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். இதில், அவரும் தீயில் கருகி உள்ளார். தீ அறை முழுவதும் பரவிய நிலையில், தஸ்மின் அப்பாசின் கணவர் தீயை அணைப்பதற்கு உதவிகேட்டு அலறியபடி மற்றவர்களை எழுப்புவதற்காக கதவை திறந்து வெளியே ஓடிஇருக்கிறார். அப்போது, துரதிருஷ்டவசமாக கதவு பூட்டிக்கொண்டது.
இதன் காரணமாக தஸ்மின் அப்பாசும், மகன் மோயிஸ் அப்பாசும் அறைக்குள்ளேயே சிக்கி கொண்டனர். இருவரும் உயிரை காப்பாற்றி கொள்ள நினைத்து குளியலறைக்குள் சென்று தஞ்சம் அடைந்தபோது புகை மூட்டத்தால் மூச்சு திணறி அவர்களும் பலியாகியது தெரியவந்தது.
இந்த தீ விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
18 நாட்களில் 3 தீ விபத்துகள்நாட்டின் நிதி நகரமான மும்பையை அண்மைகாலமாக தீ மிரட்டி வருகிறது. கடந்த 18 நாட்களில் 3 பெரும் தீ விபத்துகள் ஏற்பட்டு உள்ளன. கடந்த மாதம் 18–ந்தேதி சாக்கிநாக்காவில் நொறுக்குதீனி கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் அங்கு வேலை பார்த்து வந்த 12 தொழிலாளர்கள் தீக்கிரையாகினர். அந்த சோக சுவடு மறைவதற்குள், 29–ந்தேதி லோயர் பரேல் கமலா மில் வளாகத்தில் ‘ஒன் அபோவ்’ என்ற கேளிக்கை விடுதியில் இளம்பெண்ணின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, தீ விபத்து ஏற்பட்டு அந்த இளம்பெண் உள்பட 14 பேர் மாண்டனர்.
இந்தநிலையில் தான், நேற்று அந்தேரியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீப்பிடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் உயிரை பலி வாங்கி உள்ளது.