இசை தரும் இன்பம்


இசை தரும் இன்பம்
x
தினத்தந்தி 5 Jan 2018 12:30 PM IST (Updated: 5 Jan 2018 11:37 AM IST)
t-max-icont-min-icon

தமிழர்களின் இசை வாழ்வியலோடு, உணர்வோடு கலந்தது. பிறந்தது முதல் மறையும் வரை ஒவ்வொரு அங்கத்திலும் இசையை வைத்து தங்கள் வாழ்க்கை முறையை பிணைத்துக் கொண்டவர்கள் தமிழர்கள்.

-டாக்டர் சீர்காழி ஜி.சிவசிதம்பரம்

குறிப்பாக தமிழ் இசை உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மொழியோடும், புலமையும், இனிமையும் சேர்ந்தது. வெறும் ஒரு காதால் கேட்டு இன்னொரு காதால் விட்டு விடுவது அல்ல, இசை. இரு காதுகளுக்கு இடையே மூளைக்கும் தொடர்புடையது. இப்படிப்பட்ட இசை சிறப்பு வாய்ந்த சென்னை நகரை சமீபத்தில் யுனஸ்கோ நிறுவனம், ‘இசைக்கான நகரம்’ என்று அறிவித்துள்ளது. சற்று தாமதமாக வந்த அங்கீகாரம் இது. என்றாலும், பாராட்டியே தீர வேண்டும்.

ஆண்டின் 365 நாட்களும் வீட்டு வைபவங்கள், திருமண நிகழ்வுகள், ஆலய விழாக்களில் சங்கீதமும், நாட்டியமும் செழிக்கும் வண்ணம் வாழ்வு முறையை அமைத்துக் கொண்டவர்கள், தமிழர்கள். நம்மை ஆட்சி செய்த வெள்ளையர்கள் டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையை கொண்டாட தங்கள் நாட்டுக்கு செல்வர். அப்போது, இங்கே விடுதலை போராட்டங்கள் தொடர்பாக பிரச்சினை எதுவும் வராமல் இருக்க என்ன வழி? என்று யோசித்தனர். நம்மக்கள் உணர்வுகளை வசப்படுத்தக்கூடிய சக்தி இசைக்கு இருப்பதை உணர்ந்து டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் காலத்தில் நாட்டில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருக்க, தங்களின் விசுவாசிகளான பொறுப்புகள் வழங்கப்பட்ட நபர்கள் மூலம் இசை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்தனர். டிசம்பர் சீசன் இசை நிகழ்ச்சி உருவானதற்கு இதுவே காரணம்.

ஆலயங்களில் கலையும், இசையும் ஆதரித்து வந்த காலக்கட்டம் அது. மாலை தொடங்கி அதிகாலை வரை கூட்டத்தைச் சேர்த்து கலையால் கட்டுப்படுத்தி வைத்து இருந்தார்கள். நமது நாட்டில் குளிர் காலத்தில் குரலிசை பாடகர்களுக்கு குரல் ஒத்துழைக்காது. வாத்தியக்காரர்களுக்கு வாத்தியக் கருவிகள் இசைப்பில் சிரமம் ஏற்படும். குளிர் காலத்தில் டிசம்பர் சீசன் என்ற ஒரு வழக்கம் ஏற்பட இதுதான் காரணம். தமிழ்நாட்டில் ஆண்டு முழுவதும் சங்கீத சீசன்தான். இசை விழாக்கள்தான்.

அருணகிரி நாதர், வள்ளலார் பாடல்களை இசையோடு பாடும்போது அது செவிக்கு மட்டுமின்றி உள்ளத்துக்கும் இதம் தரும். இன்பம் தரும். தற்போது இசை குறித்து மருத்துவ துறை சார்ந்த ஆய்வுகளும் செய்கின்றனர். கர்நாடக சங்கீத பாடல்களை பாடும்போது மூளையின் பல பாகங்கள் உடனுக்குடன் செயல்படுவதை இன்று கண்டுபிடித்திருக்கின்றனர். இசையை ரசித்து கேட்கும்போது நரம்பியல் சம்பந்தமான ‘என்டார்பின் ஹார்மோன்’ அதிகமாக சுரக்கிறது என்பதும் தெரியவந்து உள்ளது. அதன் விளைவாக அதிகமாக கோபப்படுபவர்கள், உடல் வலியால் அவதிப்படுபவர்கள் இசையை கேட்டால் குணமடைகிறார்கள் என்று நிரூபணம் ஆகி இருக்கிறது.

பக்தி இல்லாமல் இசை இல்லை. ஆலய கச்சேரிகளில் பக்திபூர்வமாக தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடி விட்டு, மக்கள் விரும்பக் கூடிய பாடல்களையும், திரையில் வந்த பக்தி பாடல்களையும் எல்லோரும் மகிழும் வண்ணம் பாடுவது மரபு வழியாகும். இசை ஆழ்மனதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக்கூடிய வல்லமைக் கொண்டது. சுய மரியாதையை போற்றிய பெரியார் இசையும், கலையும் மனிதரை அடிமையாக்கி விடக்கூடாது என கருதினார்.

மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு அடிப்படை பண்பாட்டை கற்றுக்கொடுக்க மேலை நாடுகளில் ஒரு ஆசிரியர் அவர்களுக்கு டிரம்ஸ் குச்சியை கொடுத்து அதை அடிக்க கற்றுக் கொடுத்தார். இசை வழியாக அடிப்படை கட்டுப்பாட்டை கொண்டு வந்தார். பின்னர் படிப்படியாக அந்தக் குழந்தைகள் தங்கள் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக் கொள்ளும் நிலை உருவானது.

பாடல்களை மெய் மறந்து கேட்கும்போது மனிதன் கவலையை மறக்கிறான். உற்சாகம் பீறிட்டு வருகிறது என்பதை கவனித்து மியூசிக் தெரபி என்னும் மருத்துவ முறையை உருவாக்கினர். இந்த மருத்துவ முறை நாள்பட்ட நோய்கள் மூட்டு வலி, மன நோய்கள் போன்றவைகளுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. இசையுடன் பாடலை கேட்கும்போது நீரழிவு, ரத்த அழுத்தம் நோய் கட்டுக்குள் வருகிறது என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது.

சற்குரு தியாகராஜ சுவாமிகள் சரபோஜி மகாராஜாவின் வயிற்று வலியை கீர்த்தனைபாடி குணப்படுத்தியதாக வரலாறு உண்டு. முத்துசாமி தீட்சிதர் எட்டையபுரத்தில் வறண்டு கிடந்த பூமியை அமிர்தவர்ஷினி ராகத்தில் கீர்த்தனம் பாடி மழையை பொழிய வைத்தார். தமிழ் இசை மூவரில் முத்து தாண்டவர் பாம்பு தீண்டிய ஒருவரை ‘அருமருந்து ஒரு தனி மருந்து’ என்று கீர்த்தனம் பாடி குணப்படுத்திய வரலாறும் உண்டு. திருநாவுக்கரசர், அரவம் தீண்டி இறந்த அப்பூதி அடிகளின் மகனை, பாடல்கள் பாடி உயிர்பித்ததும், திருஞான சம்பந்தர், பூம்பாவை என்ற பெண்ணை பதிகம்பாடி உயிர் எழச் செய்த வரலாறும் உண்டு. இப்படிப்பட்ட உண்மைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த காலத்திலும் சரி, நிகழ் காலத்திலும் சரி, இனி வருங்காலத்திலும் சரி இசையால் தான் பெரும் மாற்றங்களை காண முடியும். இசை கலைஞர்கள் அந்த மரபுகளை மாற்றாமல், நெறி முறைப்படி, இசையோடும் உணர்வோடும், வலியுறுத்தி செயல்பட்டு வந்தால் இசையை யாராலும், எந்த தளத்திலும் அசைக்க முடியாது. இசையாலும் உலகை ஆளலாம்.

Related Tags :
Next Story