விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையிலான தேர்தல்


விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையிலான தேர்தல்
x
தினத்தந்தி 5 Jan 2018 1:00 PM IST (Updated: 5 Jan 2018 11:41 AM IST)
t-max-icont-min-icon

தமிழகப் பொதுவாழ்வு தளத்தில் பணம், சாதி, புஜபலம் என்பதுதான் அடிப்படைத் தேவையாக இன்றைக்கு உள்ளது. இதனால் தான் தேர்தலில் கிரிமினல்கள் கூட வெற்றிப்பெறுகிறார்கள்.

-வக்கீல் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

பொதுவாழ்வில் தகுதியானவர்கள் சட்டமன்றத்துக்கோ, நாடாளுமன்றத்துக்கோ செல்ல முடியாத நிலை. 27 சதவீத வாக்குகளை பெற்றாலே ஒருவர் தேர்தலில் வெற்றி பெறக்கூடிய நிலை. நாட்டின் பிரச்சினைகளையும் மக்களின் கஷ்ட, நஷ்டங்களையும் அறிந்தவர்கள் தான் நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் மக்களின் பிரதிநிதியாக செல்லவேண்டும். ஆனால் இன்றைய சூழலில் அப்படி தகுதியானவர்களும், நேர்மையானவர்களும் செல்ல முடியவில்லை. நாட்டின் பிரச்சினைகளை புரிந்து கொண்டவர்கள், படித்தவர்கள் செல்லக்கூடிய தமிழக மேலவையும் ஒழிக்கப்பட்டு விட்டது.

இந்தநிலையில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை வந்தால் நேர்மையான மக்கள் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் சென்று பங்கேற்கலாம். லண்டனில் 1930-ம் ஆண்டு கூடிய தேர்தல் சீர்திருத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் விகிதாச்சார வாக்குரிமை பற்றி விவாதிக்கப்பட்டது. இந்தியா போன்ற பல்வேறு மொழிகள், இனங்கள் கொண்ட சுவிட்சர்லாந்து நாட்டில் விகிதாச்சார வாக்குரிமை நடைமுறையில் இருக்கிறது.

விகிதாச்சார வாக்கு முறையை இந்தியாவில் நடைமுறைக்குக் கொண்டு வருவதில் பல சிக்கல்கள் ஏற்படலாம். இந்தியாவின் அரசியல் கட்சிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் பல்வேறு துறை அறிஞர்களிடம் கலந்தாலோசனை செய்து விகிதாச்சார வாக்குரிமை முறையை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை அறிய வேண்டும்.

விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் வேட்பாளர்களின் பெயர்கள் இருக்காது. கட்சிகளின் பெயர்களோடு அதன் சின்னங்கள் மட்டுமே வாக்குச்சீட்டில் இருக்கும். ஒரு கட்சிக்கு கிடைக்கும் மொத்தவாக்குகளைப் பொறுத்து எம்.பி., எம்.எல்.ஏ.க்களை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும். அந்த வாக்குகளுக்கு ஏற்ப, கட்சிகள் தங்களின் பிரதிநிதிகளை மக்கள் பிரதிநிதி பொறுப்புக்கு அனுப்பிவைக்கும். இந்த முறையில் குதிரைபேரம் இருக்காது.

கட்சி சார்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் என்பதை விடுத்து அவர்களை பொதுவானவர்களாக கருதக்கூடிய நிலையில், சில நாடுகளில் விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல்முறை இருக்கிறது. சிலநாடுகளில் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அறிவிக்க விரும்பும் பிரதிநிதிகள் பட்டியலை கட்சிகள் முன்கூட்டியே அளித்து விடுவதால், அவர்களின் தகுதியையும் மக்கள் எடை போட்டு பார்த்துக் கொள்வார்கள். வேட்பாளரின் பண பலம், புஜபலம் மற்றும் ரவுடியிசம், சாதி, மதவெறி குறைய வாய்ப்பு ஏற்படும். இப்போதைய தேர்தல் நடைமுறையால் அரசுக்கு ஏற்படும் தேர்தல் செலவு குறைவது மட்டுமின்றி, எம்.எல்.ஏ.க்கள் நேர்மையாக நடக்கவும் வாய்ப்பு அதிகரிக்கும்.

இதை எப்படி பார்ப்பதென்றால், சான்றாக 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் பா.ஜ.க. பெற்ற வாக்குகள் 17 கோடியே 16 லட்சத்து 37 ஆயிரத்து 684. இது மொத்த வாக்குகளில் 31 சதவிகிதம் ஆகும். ஆனால், அக்கட்சிக்கு 282 எம்.பி.க்கள் இருந்தனர். இது மொத்தமுள்ள எம்.பி.க்களின் எண்ணிக்கையில் 51.9 சதவிகிதம். அதே போல் காங்கிரஸ் கட்சிக்கு 10 கோடியே 69 லட்சத்து 35 ஆயிரத்து 311 வாக்குகள் கிடைத்தன. இது 19.3 சதவிகிதம். ஆனால், காங்கிரஸ் எம்.பி.க்களின் எண்ணிக்கை 44 பேர் மட்டுமே. இது எம்.பி.க்களின் எண்ணிக்கையில் 8.1 சதவிகிதம்தான்.

உலக நாடுகள் பலவற்றில் கட்சிப்பட்டியல் விகிதாச்சார முறை, கட்சி வேட்பாளர்கள் கலந்த விகிதாச்சார முறை, முன்னுரிமை வாக்குமுறை, கூட்டு விகிதாச்சார முறை, வரையறுக்கப்பட்ட வாக்குகள் விகிதாச்சார முறை, பெரும்பான்மை முன்னுரிமை விகிதாச்சார முறை போன்ற வடிவங்களில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையிலான தேர்தல் நடைமுறையில் உள்ளது. இந்தியாவில் (மாநிலங்களவை தேர்தலில்) முன்னுரிமை வாக்கு முறை என்ற விகிதாச்சார முறை கடைபிடிக்கப்படுகிறது.

விகிதாச்சார வாக்குரிமை என்பது கணித முறைப்படி வகுப்பதாகும். 1962-ல் கோவையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவிலும், சிறப்பு மாநாட்டிலும், தேர்தல் அறிக்கையிலும் இந்தியாவுக்கு விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை வேண்டும் என்று பேரறிஞர் அண்ணா வலியுறுத்தினார். ஜெயப்பிரகாஷ் நாராயணன், லோகியா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் இது பற்றி விவாதிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர். அதன்படி, மக்கள் பிரதிநிதிகள் பட்டியலில் அனைத்துக் கட்சியினரும் இடம்பெறும் வகையில் இம்முறையை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையிலான தேர்தல் நடைமுறையில் சாத்தியமில்லை என்ற கருத்து பலரிடமும் உள்ளது. ஆனால், இதை சீர்தூக்கி ஆராய்ந்து, இதனால் இந்திய ஜனநாயகத்திற்கு கிடைக்கின்ற அரசியல் ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டு, இந்த முறையை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கான பொது விவாதம் அவசியம்.

Next Story